கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மார்ச் 25-ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 6-ம் கட்டமாக கடந்த 1-ந்தேதி முதல் வருகிற 31-ந்தேதி வரை ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. 6-ம் கட்ட ஊரடங்கில் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அந்த வகையில் தமிழகம் முழுவதும் தளர்வு இல்லா ஊரடங்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது. ஏற்கனவே சென்னையில் முழு ஊரடங்கின்போது 2 ஞாயிற்றுக்கிழமைகளிலும், கடந்த 5 மற்றும் 12-ந்தேதிகள் என மொத்தம் 4 முறை தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் சென்னையில் 5-வது முறையாக தளர்வு இல்லா முழு ஊரடங்கு இன்று அமலாகிறது. அந்த வகையில் இன்று மருந்தகங்கள், மருத்துவமனைகள், பால் நிலையங்கள் என அத்தியாவசியமானது மட்டுமே செயல்படும்.
துணிக்கடைகள், வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள், மளிகை கடைகள், இறைச்சிக் கடைகள், மீன் மார்க்கெட்டுகள், காய்கறி, பழ மார்க்கெட்டுகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் என அனைத்து இடங்களும் இன்று மூடப்படுகின்றன.
முக்கிய சாலைகள் மற்றும் இணைப்புச் சாலைகள் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டிருக்கும். அத்தியாவசிய காரணங்களுக்காக இல்லாமலும், உரிய அடையாள அட்டை இல்லாமலும் பயணிப்போர் போலீசாரின் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும்.
தளர்வு இல்லா முழு ஊரடங்கு இன்று அமலாவதையொட்டி, முன்கூட்டியே தேவையான பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ள பொதுமக்கள் நேற்று ஆயத்தமானார்கள். இதையொட்டி மளிகை கடைகள், காய்கறி, பழ மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டத்தை பார்க்க முடிந்தது. இவ்வாறு கடைகளுக்குச் சென்று பொதுமக்கள் முன் கூட்டியே தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கினர். அந்த வகையில் திருமழிசை காய்கறி சந்தை, மாதவரம் பழ சந்தைகளில் மக்கள் கூட்டத்தை பார்க்க முடிந்தது.
அதேபோல ஞாயிற்றுக்கிழமை என்றாலே பெரும்பாலானோர் வீடுகளில் அசைவ உணவு நிச்சயம் இடம்பெறும். தற்போது தளர்வு இல்லாத முழு ஊரடங்கில் இறைச்சிக் கடைகளும் மூடப்படுவதால், முன்கூட்டியே தேவையான இறைச்சியை வாங்கிவிட மக்கள் முடிவு செய்தனர். அதன்படி ஆடு, கோழி இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டத்தை பார்க்க முடிந்தது.
அதேபோல மீன் மார்க்கெட்டுகளிலும் மக்கள் கூட்டம் இருந்தது. வானகரம் மீன் மார்க்கெட்டில் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணி வரை மட்டுமே மார்க்கெட் செயல்பட்டது. வியாபாரிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். போலீசாருடன், மீன் மார்க்கெட் வியாபாரிகளும் சேர்ந்து முகக்கவசம் இல்லாமல் வியாபாரிகள் வருகிறார்களா? என்பதை கண்காணித்து, கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல காசிமேடு, சிந்தாதிரிப்பேட்டை, காவாங்கரை, திரு.வி.க. நகர் உள்ளிட்ட நகரின் மீன் மார்க்கெட்டுகளில் நேற்று மக்கள் கூட்டம் இருந்தது.