தமிழகத்தில் 7-வது கட்ட ஊரடங்கின் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று தமிழகம் முழுவதும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி சென்னையில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவின் தாக்கம் தமிழகத்திலும் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்திருந்தாலும், தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. இதனால், தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
அதன்படி, 7-வது கட்ட ஊரடங்கின் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று தமிழகம் முழுவதும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. அதாவது இன்றைய தினம் பாலகங்கள் மற்றும் மருந்து கடைகள் தவிர்த்து காய்கறி, மளிகை உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்படும்.
பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் தான் தளர்வு இல்லாத ஊரடங்கு உத்தரவு ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்படுகிறது. எனினும் மக்கள் ஞாயிற்றுக்கிழமைக்கு தேவையான மீன், இறைச்சி போன்ற அசைவ பொருட்களை நேற்றே வாங்கி குளிர்சாதன பெட்டியில் வைத்து கொண்டனர்.
இதனால் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று அதிகாலை 2 மணி முதல் காலை 7 மணி வரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் வந்து மீன்களை வாங்கி சென்றனர். இதேபோன்று திருவொற்றியூரில் உள்ள காய்கறி மற்றும் மீன் மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னை பட்டினப்பாக்கத்திலும் மீன்களை வாங்க ஏராளமானோர் வந்தனர்.
இதனால் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக போலீசார் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களை பட்டினப்பாக்கம் கடலோர சாலையில் அனுமதிக்கவில்லை. மாறாக மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களை கலங்கரை விளக்கத்துக்கு பின்னால் உள்ள அணுகு சாலையில் நிறுத்தி வைத்துவிட்டு, நடந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
இவ்வாறு மக்கள் கூட்டத்தை போலீசார் சீர்செய்த போதிலும், மீன் வியாபாரம் செய்யும் பெண்கள் முககவசம் அணியாமல் இருந்ததை கண்டு கொள்ளவில்லை. மீன் வாங்க வந்தவர்கள் பெரும்பாலும் முககவசம் அணிந்த நிலையில், மீன் வியாபாரம் செய்யும் பெண்கள் முககவசம் அணியாமல் இருந்தது மீன் வாங்க வந்தவர்களிடையே நோய் தொற்று பரவுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது.
சென்னை அயனாவரம், புரசைவாக்கம் தானா தெரு, ராயப்பேட்டை வி.எம்.தெருவில் உள்ள காய்கறி மார்க்கெட் என காய்கறி மார்க்கெட்டுகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் சென்னையில் உள்ள பெரும்பாலான இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.