இன்று தமிழகத்தில் 1 லட்சம் அரிசி ஆலைகள் மற்றும் கடைகள் மூடப்பட்டது
அரிசிக்கு 5 சதவீதம் ஜி.எஸ்டி. வரி விதிக்கப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் அரிசி ஆலைகள், கடை உரிமையாளர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் 1 லட்சம் கடைகள் அடைக்கப்பட்டன. சென்னையில் மட்டும் 1000அரிசி கடைகள் மூடப்பட்டன.
முக்கிய உணவு பொருளான அரிசிக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அரிசி வியாபாரிகள் அச்சமடைந்து உள்ளனர். சென்னையில் செங்குன்றம், மாதவரம் பகுதியில் ஏராளமான நெல் அரிசி அரைவை மில்கள் உள்ளன. இங்கு “நெல்” அரைத்து அரிசி உற்பத்தி செய்து மொத்த வியாபாரம் செய்து வருகின்றனர்.
தற்போது புதிதாக விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி 5 சதவீத வரியால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இதனால் அரிசியின் விலை உயரும் அபாயம் ஏற்படும் என அரிசி வியாபாரிகள் கவலை அடைந்து உள்ளனர். சில்லரை வியாபாரிகள் இதன் காரணமாக மூட்டைக்கு 100 ரூபாய் கூடுதலாகவும் ஒரு கிலோவுக்கு ரூ. 3 முதல் 5 ரூபாய் வரை கூடுதலாக விற்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் அரிசிக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பை கண்டித்து இன்று சென்னையில் அரிசி வியாபாரிகள் போராட்டத்தில் இறங்கினார்கள். இதையொட்டி இன்று அரிசி கடைகளை அடைத்து மத்திய, மாநில அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போராட்டத்தில் குதித்தனர்.
சென்னையில் பிராட்வே கொத்தவால் சாவடி மார்க்கெட், மற்றும் கோயம்பேடு உணவு பொருள் அங்காடியில் உள்ள அரிசி கடைகள் அனைத்தும் இன்று அடைக்கப்பட்டன. சென்னையில் திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், வடபழனி, வண்ணாரப்பேட்டை, மாதவரம், செங்குன்றம் பகுதி உள்பட சுமார் 1000 அரிசி கடைகள் இன்று மூடப்பட்டு இருந்தன. இதனால் அரிசி வாங்க வந்த பொதுமக்கள் அரிசி கடைகள் மூடப்பட்டதால் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இது குறித்து ஒரு அரிசி வியாபாரி ஒருவர் கூறியதாவது:-
அரிசிக்கு விதிக்கப்பட்ட 5 சதவீத ஜிஎஸ்டி வரியால் அரிசி உற்பத்தி, விற்பனை தொழில் பெருமளவு பாதிக்கப்படும். இதனால் மொத்த, சில்லறை விற்பனை செய்யும் அரிசி வியாபாரிகள் நலிவடைந்து வேறு தொழிலுக்கு செல்ல நேரிடும். வெளிமாநிலத்தில் இருந்து வரும் நெல், அரிசி, கோதுமை, பருப்பு ஆகியவற்றின் கொள்முதலில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இந்த ஜி.எஸ்.டி.வரிவிதிப்பு உள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் ஜி.எஸ்டி. வரி விதிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இவர் அவர் கூறினார்.