சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தனது கோரத்தாண்டவத்தை காட்டி வருகிறது. கொரோனாவின் தாக்கம் நமது நாட்டிலும் அதிகரித்து வருகிறது.
தமிழகத்திலும் அதன் தாக்கம் காணப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால், கடந்த ஜூன் 19-ந் தேதி முதல் அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி, மளிகை, மருந்து கடைகள் தவிர்த்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு முழு ஊரடங்கு உத்தரவு ஜூன் 31-ந் தேதி வரை அமல்படுத்தப்பட்டது.
இந்த காலக்கட்டத்தில் 21 மற்றும் 28-ந் தேதி ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் மேற்கூறப்பட்ட 4 மாவட்டங்களிலும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டது. பின்னர், ஜூலை மாதமும் 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், 6-வது கட்டமாக கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு தமிழகம் முழுவதும் ஜூலை 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை அறிவிக்கப்பட்டது. எனினும் இந்த காலகட்டத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வு இல்லாத ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஜூலை 5-ந் தேதி தமிழகம் முழுவதும் தளர்வு இல்லா முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.
பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் தான் தளர்வு இல்லாத ஊரடங்கு உத்தரவு ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்படுகிறது. எனினும் மக்கள் ஞாயிற்றுக்கிழமைக்கு தேவையான மீன், இறைச்சி போன்ற அசைவ பொருட்களை நேற்றே வாங்கி குளிர்சாதன பெட்டியில் வைத்துக் கொண்டனர்.
இதனால் சென்னை காசிமேடு பகுதியில் சாலையில் விறக்கப்பட்ட மீன்கடைகள், திருவொற்றியூரில் உள்ள காய்கறி மற்றும் மீன் மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் சென்னையில் உள்ள பெரும்பாலான இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் அலை மோதியது. சென்னை லாயிட்ஸ் சாலையில் உள்ள காய்கறி மார்க்கெட் உள்பட பெரும்பாலான காய்கறி மார்க்கெட்டுகளிலும் மக்கள் அதிக அளவில் குவிந்தனர்.