அரிய வானியல் நிகழ்வான நெருப்பு வளைய சூரிய கிரகணம் இந்தியாவில் இன்று காலை 8.08 மணி அளவில் தொடங்கியது. பின்னர் படிப்படியாக சூரியனை நிலவு மறைக்கும் காட்சி தென்படத் தொடங்கியது. அப்போது சூரியனின் நடுப்பகுதியை முழுமையாக மறைக்காமல், 93 சதவீதம் அளவிற்கு மறைத்தது. இதனால், சூரியன் சிவப்பு நிற வட்ட வளையமாக தோன்றியது.
உலக அளவில் துபாயில் முதலில் முழுமையான நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரிந்தது. அதன்பின்னர் மற்ற இடங்களில் தெரியத் தொடங்கியது.
இந்த நெருப்பு வளைய சூரிய கிரகண நிகழ்வு ஒவ்வொரு பகுதியிலும், ஓரிரு நிமிட வித்தியாசத்தில் முழுமையாக தெரிந்தது. சென்னை, ஊட்டி, கோவை, ஈரோடு, திருப்பூர், திருச்சி, கரூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, புதுச்சேரி மற்றும் கேரள மாநிலம் பாலக்காடு, கொச்சி, உள்பட தென்னிந்தியா முழுவதும் ஓரளவு இந்த சூரிய கிரகணத்தை காண முடிந்தது.
இலங்கை, சிங்கப்பூர், சவுதி அரேபியா, கத்தார், மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் சூரிய கிரகணம் தெரிந்தது. தமிழகத்தைப் பொருத்தவரை கிரகணத்தின்போது வெவ்வேறு நிறங்களில் சூரியன் தெரிந்தது.
இந்த அரிய கிரகணத்தை வெறும் கண்களால் நேரடியாக பார்க்கக் கூடாது என அறிவியலாளர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அத்துடன் கிரணத்தை பார்ப்பதற்காக சென்னை உள்பட மாநிலம் முழுவதும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அப்பகுதிகளுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சென்று, சூரிய கண்ணாடி மூலமாக கிரகணத்தை ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.