இன்று குழந்தைகள் தேர்ந்தெடுக்கும் பாதை வருங்கால இந்தியாவை தீர்மாணிக்கும் – குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பேச்சு

டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தனர். குழந்தைகள் தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் கூறியுள்ளதாவது:

குழந்தைப் பருவம் வாழ்க்கையின் மிக அழகான கட்டம். அதுவே அவர்களை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன. குழந்தைகளின் களங்கமில்லா தன்மையையும், தூய்மையையும் நாம் கொண்டாடுகிறோம். ஒவ்வொரு புதிய தலைமுறையும், புதிய வாய்ப்புகள் மற்றும் கனவுகளை கொண்டு வருகின்றன.

தற்போது தொழில்நுட்ப முன்னேற்றத்தால் அனைத்து தகவல்களும் குழந்தைகளின் விரல் நுனியில் இருக்கின்றன. சிறந்த முறையில் குழந்தைகளுக்கு கற்பித்து அவர்களை பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் விவாதங்களில் ஈடுபடுத்துவது மிக முக்கியமானது. நாமும் குழந்தைகளிடமிருந்து அதிக அளவில் கற்றுக் கொள்ள முடியும்.

பள்ளிக் குழந்தைகள் இந்தியாவின் கலாச்சாரத்துடன் இணைந்திருக்க வேண்டும். பெற்றோரை எப்போதும் மதிக்க வேண்டும், தாய்நாட்டை நேசிக்க வேண்டும். புதிய மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியா குறித்து கனவு காண வேண்டும். இன்றைய கனவுகள் நாளைய நனவாக மாறும்.

நீங்கள் வளரும் போது எந்த மாதிரியான இந்தியாவில் வாழ வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதைப் பற்றி சிந்திக்க வேண்டும். முடிவுகளைப் பற்றி கவலைப்படாமல் கடமையை செய்ய வேண்டும். அது தானாகவே மிகப்பெரிய வெற்றியை நோக்கி கொண்டு செல்லும். இன்று குழந்தைகள் தேர்ந்தெடுக்கும் பாதை, வருங்கால இந்தியாவின் பயணத்தை தீர்மானிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools