இன்று காவிரி மேலாண்மை கூட்டம் டெல்லியில் நடக்கிறது

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் கடந்த 11-ந்தேதி டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், “தமிழ்நாட்டுக்கு முறைப்படி திறந்து விடவேண்டிய தண்ணீரை கர்நாடகம் திறந்து விடவில்லை. அதுகுறித்த உத்தரவுகளை கர்நாடக அரசுக்கு ஆணையம் பிறப்பிக்க வேண்டும்” என தமிழக அதிகாரிகள் வலியுறுத்தினார்கள்.

ஆனால் கர்நாடக அதிகாரிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் தமிழக அதிகாரிகளிடம் மிரட்டும் தொனியில் பேசியதாக தெரிகிறது. இதனால் தமிழக அதிகாரிகள் வெளிநடப்பு செய்தனர். இதற்கிடையே, வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் 37.9 டி.எம்.சி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டது.

ஆனாலும் கர்நாடக அரசின் போக்கை எதிர்த்து தமிழ்நாடு அரசு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. கடந்த 25-ந்தேதி வழக்கை நீதிபதிகள் விசாரித்தபோது, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடக அரசு எந்த வகையில் நடைமுறைப்படுத்தி இருக்கிறது? என்ற விவரத்தையும், கர்நாடக அணைகளின் நீர் இருப்பு விவரங்களையும் செப்டம்பர் 1-ந்தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.

அதுமட்டுமின்றி தமிழ்நாட்டுக்கு திறந்து விடப்படும் நீரின் அளவை குறைக்க அனுமதி கோரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு அளித்த மனு மீதும், ஆணையம் உத்தரவிட்ட நீரின் அளவு போதுமானதல்ல என்று தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு மீதும் காவிரி மேலாண்மை ஆணையம் விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து இருந்தனர்.

இந்த உத்தரவின் அடிப்படையில் முடிவு எடுப்பதற்காக காவிரி மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது. டெல்லியில் உள்ள காவிரி மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் இந்த கூட்டம் பிற்பகலில் நடைபெற உள்ளது. இது ஆணையத்தின் 23-வது கூட்டம் ஆகும். ஒரே மாதத்தில் ஆணைய கூட்டம் இருமுறை நடப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கையாக அளிக்கப்படும். காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் மூலமாக வாடும் பயிர்களுக்கு தண்ணீர் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு டெல்டா விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது.

இதற்கிடையே, ஆகஸ்டு மாதத்தில் எஞ்சியுள்ள இரு வாரங்களுக்கான நீர் குறித்து காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என கடந்த 25-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்ற விசாரணையில் மத்திய நீர்வளத்துறை தெரிவித்து இருந்தது. அதன்படி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் நேற்று காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டு அதிகாரிகள் சென்னையில் இருந்து காணொலி வாயிலாக கருத்துகளை முன்வைத்தனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news