இன்று காங்கிரஸ் புதிய தலைவரை தேர்வு செய்ய வாய்ப்பு!
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி, தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமாவை காங்கிரஸ் செயற்குழு ஏற்றுக்கொள்ளாத போதிலும் தனது முடிவில் ராகுல் காந்தி உறுதியாக உள்ளார். புதிய தலைவரைத் தேர்வு செய்யும்படி அறிவுறுத்தினார். இதற்காக செயற்குழு கூட்டத்தை கூட்டி விவாதிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், பாராளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்றதால் செயற்குழு கூட்டம் நடத்துவது தாமதம் ஆனது.
பாராளுமன்ற கூட்டத் தொடர் நிறைவடைந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்வு குறித்து விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
தலைவர் பதவிக்கு முகுல் வாஸ்னிக், மல்லிகார்ஜூன கார்கே, குமாரி செல்ஜா, சச்சின் பைலட் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. இவர்களில் முகுல் வாஸ்னிக்(59) தேர்வாக அதிக வாய்ப்பு உள்ளதாக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.