அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். ரோப் கார் பராமரிப்பு பணிகள் காரணமாக இயக்கப்படாததால் மின் இழுவை ரெயில் மூலம் மூலமே பக்தர்கள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். இதே போல படிப்பாதை வழியாகவும் பக்தர்கள் நடந்து சென்று மலைக்கோவிலுக்கு சென்றனர். கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பழனி தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
தரிசனத்துக்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்த பிறகே சாமி தரிசனம் செய்ய முடிந்தது. உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூரைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, பறவை காவடி, மலர் காவடி எடுத்து ஊர்வலமாக வந்தனர். இதனால் அடிவாரம் பகுதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
காவடி எடுத்து வந்த பக்தர்கள் பாட்டுப்பாடியும், ஆட்டம் போட்டும் உற்சாகத்தோடு மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். மலைக்கோவில் பாரவேல் மண்டபம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அங்கு பக்தர்கள் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். இதே போல பழனி கோவிலின் உப கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.