தென் கைலாயம் என்று போற்றப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். இங்குள்ள அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் நன்மை கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது.
குறிப்பாக மாதந்தோறும் அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது. இதன் காரணமாக அன்றைய நாளில் ராமேசுவரத்தில் வழக்கத்தை விட அதிகளவில் பக்தர்கள் திரளுவார்கள். அதன்படி இன்று ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதலே நூற்றுக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்தனர். அங்கு அவர்கள் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். அதன்பின் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடிய பக்தர்கள் ராமநாத சுவாமியையும், பர்வதவர்த்தினி அம்பாளையும் தரிசனம் செய்தனர்.
அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை, கோவில், ரத வீதி உள்பட பல்வேறு இடங்களில் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டமாக காட்சியளித்தது. பக்தர்களின் வருகையை முன்னிட்டு அவர்களுக்கு தேவையான வசதிகளை நகராட்சி, கோவில் நிர்வாகம் செய்திருந்தது.
போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முன்னதாக ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு ராமநாத சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை மேல் உள்ள சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் செல்ல கடந்த 15-ந்தேதி முதல் 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
அமாவாசையான இன்று அதிகாலையிலேயே மலையடிவாரமான தாணிப் பாறையில் பெண்கள் உள்பட ஏராளமானோர் திரண்டனர். காலை 7 மணிக்கு வனத்துறையினரின் சோதனைக்கு பின் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். அமாவாசையை முன்னிட்டு சந்தன, சுந்தர மகாலிங்கத்துக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன.