Tamilசெய்திகள்

இன்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

கொரோனா தொற்று பரவலைத் தடுக்க கடந்த மார்ச் 25-ந் தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு படிப்படியாக தளர்வுகளை அனுமதித்து வருகிறது.

தற்போது தமிழகத்தில் தொடர்ந்து பொது போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே இ-பாஸ் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்படி மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. இதை பின்பற்றும் பட்சத்தில் மக்களின் நடமாட்டம் அதிகமாகி, தொற்று எண்ணிக்கை உயரவும் வாய்ப்புள்ளதாக அரசு கருதுகிறது. அதைத் தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் கே.சண்முகம் ஏற்கனவே ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.

இதையடுத்து இன்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

பிற்பகலில் மருத்துவ நிபுணர் குழுவுடன் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தலைமைச் செயலகத்தில் நடக்கும் இந்த இரண்டு கூட்டங்களில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் பின்னர் அது பற்றிய அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிடுவார். அப்போது செப்டம்பர் மாதத்திலும் ஊரடங்கு நீடிக்குமா? என்னென்ன தளர்வுகள் அமலுக்கு வரும்? என்பது குறித்த அறிவிப்புகள் வெளியாக உள்ளது.