தகவல் தொழில்நுட்பத் துறையில் கொடிகட்டிப் பறக்கும் இன்போசிஸ் நிறுவனம் செலவினங்களை குறைத்து வருவாயை அதிகரிக்கும் நடவடிக்கையாக ஆட்குறைப்பு நடவடிக்கையை தொடங்கி உள்ளது.
உயர் பதவிகள் மற்றும் நடுத்தர பதவிகளில் உள்ள ஊழியர்களில் சுமார் 10 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் பணித்திறன் அடிப்படையில் இந்த பணிநீக்க நடவடிக்கை இருக்கும் என கூறப்படுகிறது.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஆட்களை தேர்வு செய்து பணியமர்த்துவதற்கான எச் -1 பி விசா மறுப்பு மற்றும் அமெரிக்காவில் உள்ளூர் ஊழியர்களை பணியமர்த்துவதில் அதிக செலவுகள் போன்ற காரணங்களாலும் இன்போசிஸ் இந்த பணி நீக்க நடவடிக்கையை மேற்கொள்வதாக கூறப்படுகிறது.
உலகளாவிய நிறுவனங்களுக்கான டிஜிட்டல் மற்றும் ஆலோசனை சேவைகளை வலுப்படுத்துவதற்காக, இன்போசிஸ் நிறுவனம் கடந்த ஆண்டில் அமெரிக்காவில் 5,000-க்கும் மேற்பட்ட உள்ளூர் ஊழியர்களை பணியமர்த்தியுள்ளது.
காக்னிசன்ட் நிறுவனம், செலவினங்களை குறைக்கும் வகையில் சமீபத்தில் 7 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவெடுத்த நிலையில், தற்போது இன்போசிஸ் நிறுவனத்திலும் ஆட்குறைப்பு நடவடிக்கை தொடங்கியிருக்கிறது. இது தகவல் தொழில்நுட்பத் துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.