ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற 7-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய டெல்லி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் சேர்த்தது.
குஜராத் சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி மற்றும் ரஷித் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத்தொடர்ந்து 163 ரன்களை துரத்திய குஜராத்துக்கு சகா 14 (7), சுப்மன் கில் 14 (13), கேப்டன் ஹர்திக் பாண்டியா 5 (4) என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 3 விக்கெட்டுகளை இழந்து 54 ரன்கள் மட்டுமே எடுத்து ஆரம்பத்திலேயே தடுமாறியது.
அந்த நிலையில் இம்பேக்ட் வீரராக களமிறங்கிய விஜய் சங்கருடன் ஜோடி சேர்ந்த இளம் வீரர் சாய் சுதர்சன் பொறுப்புடனும் நிதானமாகவும் ரன்களை குவித்து சரிவை சரி செய்தார்.
மேலும் அரைசதம் அடித்து அசத்திய சாய் சுதர்சன் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 62* (48) ரன்கள் குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் சாய் சுதர்சன் இன்னும் ஓரிரு வருடங்களில் இந்திய அணிக்காக விளையாடுவதை பார்க்க முடியும் என்று கேப்டன் ஹர்திக் பாண்டியா பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-
அவர் சிறப்பாக பேட்டிங் செய்தார். அதற்கான பாராட்டுக்கள் அவருக்கும் பயிற்சியாளர்களுக்கும் சேரும். கடந்த 15 நாட்களில் அவர் செய்து வரும் நல்ல பேட்டிங் அனைத்தும் அவருடைய கடின உழைப்பை உங்களுக்கு காட்டுகிறது. இதே போல செயல்படும் பட்சத்தில் இன்னும் 2 வருடங்களில் அவர் தன்னுடைய ஐபிஎல் அணிக்கு இன்னும் சிறப்பாக செயல்பட்டு சர்வதேச கிரிக்கெட்டிலும் இந்திய கிரிக்கெட்டுகாக முக்கிய பங்காற்றுவார் என்று கணிக்கிறேன். என பாண்ட்யா கூறினார்.
அவர் கூறுவது போல தற்போது இளம் வீரராக அனுபவமின்றி இருக்கும் சாய் சுதர்சன் இன்னும் நாட்கள் செல்ல செல்ல நல்ல அனுபவத்தை கற்று தன்னைத் தானே மெருகேற்றி இந்தியாவுக்கு விளையாடுவார் என்று உறுதியாக நம்பலாம்.
முன்னதாக சமீப காலங்களாகவே பெயரில் மட்டும் தமிழை வைத்துக்கொண்டு தமிழக வீரர்களுக்கு வாய்ப்பளிக்காத சென்னை அணி நிர்வாகம் இந்த போட்டியில் குஜராத்துக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்த சாய் சுதர்சன் – விஜய் சங்கர் போன்ற தமிழக வீரர்களின் திறமையை உணர வேண்டும் என தமிழக ரசிகர்கள் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.