Tamilசெய்திகள்

இனி வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே சிறப்பு தடுப்பூசி முகாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கடும் மழைப்பொழிவு இருந்த போதிலும், 12 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதுவரை 77.02 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 41.60 சதவீதம் பேர் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர்.

2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. எனவே அவர்கள் தாமதிக்காமல் உடனடியாக தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும்.

15 மாவட்டங்களுக்கு மேல் நோய் எதிர்ப்பு சக்தி 80 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் 60 சதவீதத்துக்கு மேல் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை உள்பட 7 மாவட்டங்களில் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை குறைந்த அளவில் இருக்கிறது.

வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிற 12-வது மெகா தடுப்பூசி முகாமுக்கு பிறகு, தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 வரை மட்டுமே தடுப்பூசி போடும் பணி நடைபெறும். மேலும், இனி வாரத்துக்கு ஒரு முறை தடுப்பூசி முகாமை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 920 பேருக்கு டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 4,527 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, 573 பேர் தற்போது சிகிச்சையில் இருக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.