ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைப் பதஞ்சலி நிறுவனம் தயாரித்து விற்பனை செய்கிறது. நவீன மருந்துகளுக்கு எதிராகப் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் விளம்பரம் செய்து வந்தது. இதற்கிடையே, பதஞ்சலி நிறுவனத்தின் தவறான விளம்பரங்கள் குறித்து இந்திய மருத்துவ சங்கம், உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்தது. அந்த மனு மீதான விசாரணைகளில் அலோபதி மருந்துகளை குறிவைத்து தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்த வழக்கில் பதஞ்சலி இணை நிறுவனர் பாபா ராம்தேவ் மூன்று முறை நீதிமன்றத்துக்கு வந்து மன்னிப்பு கேட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின்போது, பதஞ்சலி நிறுவனம் தனது தவறான விளம்பரங்களுக்காகப் பிரதான பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி பத்திரிகைகளில் மன்னிப்பு கேட்டிருந்தாலும் அந்த மன்னிப்பு விளம்பரங்கள் சிறிய அளவில் மட்டுமே இருந்ததாக இன்றைய விசாரணையின் போது நீதிமன்றத்தில் அதிருப்தி எழுந்தது. இருப்பினும், இனி எந்த விதமான தவறான விளம்பரங்களையும் வெளியிடமாட்டோம் என்று பதஞ்சலி நிறுவனம் தரப்பு மன்றாடியதை அடுத்து, அந்த உத்தரவாதத்தை ஏற்று உச்சநீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்துள்ளது.