இனி சினிமா டிக்கெட்கள் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யப்படும் – அமைச்சர் அதிரடி

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு நேற்று கோவில்பட்டியில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் அப்போது கூறியதாவது:- ’திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் உணவு பொருள்களின் தரத்தைத் தரக்கட்டுப்பட்டு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். அதேபோல, அந்த பொருள்களின் விலையை கட்டுப்படுத்தவும் பல விதிமுறைகளை வகுத்து உள்ளோம்.

திரையரங்கு கட்டணங்களை ஒழுங்குபடுத்தியுள்ளோம். திரையரங்கில் பார்க்கிங் கட்டணமும் வரைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் புக்கிங் செய்யப்படும் டிக்கெட்டுகள் வெளிப்படையாக தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு எத்தனை காட்சிகள் ஒளிபரப்பப்படுகிறது. ஒரு காட்சிக்கு எவ்வளவு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது என்பதைக் குறிப்பிட்ட சில திரையரங்குகளை சோதனை முயற்சியாகக் கண்காணித்து வருகிறோம்.

படிப்படியாக தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு விரைவில் ஆன்லைன் டிக்கெட் முறை நடைமுறைக்கு வர உள்ளது. அவ்வாறு அமலுக்கு வந்தால், இனி தமிழகம் முழுவதும் ஆன்லைன் மூலம் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்படும். அதற்கான, கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டு விரைவில் அமல்படுத்தப்படும்” என்றார்.

அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு திரைப்படத்துறையினரிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இது குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியதாவது:- தியேட்டர் வசூலில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதற்காக இது நீண்ட நாட்களாக நாங்கள் அரசிடம் வைத்த கோரிக்கை தான். ஹீரோக்களின் சம்பளம் தான் பட தயாரிப்பு தொகையில் பெரும் அளவை விழுங்குகிறது. அவர்களிடம் சம்பளத்தை குறைத்துக்கொள்ள வேண்டுகோள் வைத்தால் நீங்கள் ஒழுங்காக கணக்கு காட்டுங்கள் என்கிறார்கள்.

அதே நேரத்தில் தோல்வி அடைந்த படங்களுக்கும் வெற்றி விழா கொண்டாடுதல், 100 கோடி, 150 கோடி வசூல் என்று பொய் கணக்கு காட்டுவதும் நடக்கிறது. ஆன்லைன் மூலம் மட்டுமே டிக்கெட் என்ற நிலை ஏற்பட்டால் ஹீரோக்களின் உண்மையான மார்க்கெட் நிலவரம் தெரிய வரும். எனவே சினிமாவுக்கு இது ஆரோக்கியமான விஷயம் தான். இது சாத்தியமான ஒன்றும் கூட. கோவை திரையரங்குகளில் 80 சதவீதத்துக்கு மேல் ஆன்லைனாகி விட்டன. அவர்களால் முடிந்தது மற்றவர்களால் ஏன் முடியாது. இந்த அறிவிப்புக்காக அமைச்சருக்கு எங்களது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்’. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னணி தயாரிப்பாளரும், தயாரிப்பாளர் சங்க முன்னாள் பொருளாளருமான எஸ்.ஆர்.பிரபு கூறியதாவது:- இது 200 சதவீதம் சாத்தியமானது. வரவேற்க வேண்டிய ஒரு விஷயம். தியேட்டர்களில் டிக்கெட் எடுக்க வருபவர்களுக்கும் ஆன்லைனிலேயே டிக்கெட் புக் செய்து கொடுக்கலாம். ஆன்லைன் புக்கிங்குக்கான சேவை கட்டணம் தான் இங்கு முக்கிய பிரச்சினை. மற்ற நாடுகளில் இந்த கட்டணம் 2 முதல் 4 சதவீதம் மட்டும்தான்.

அதாவது 100 ரூபாய்க்கு 2 ரூபாய். ஆனால் இங்கு அப்படி இல்லாமல் ஒரு டிக்கெட்டுக்கு 30 முதல் 40 ரூபாய் வசூலிக்கிறார்கள். அதை குறைத்து ஒழுங்குபடுத்தவேண்டும். இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். ஒரு திரையரங்கில் ஆன்லைன் மூலம் ஒரு லட்சம் டிக்கெட்டுகள் விற்றால் 3 கோடி ரூபாய் கட்டணமாக வருகிறது. இந்த கட்டணத்தை தவிர்க்க நேரில் வந்து எடுக்கும் ரசிகர்களது நிலையையும் யோசிக்கவேண்டும். ஆனால் முழுக்க ஆன்லைன் டிக்கெட் என்பதன் மூலம் வரி ஏய்ப்பு தவிர்க்கப்படும். அரசுக்கு சேர வேண்டிய வரி முழுமையாக கிடைக்கும்.

ஹீரோக்களின் சம்பளத்தை முறைப்படுத்த முடியும். வங்கிகள் பட தயாரிப்புக்கு கடன் கொடுக்க முன்வருவார்கள். தனியாருக்கு வட்டி கட்டும் சுமை குறையும். அரசுக்கு வரி வருமானம் அதிகரிக்கும் என்பதால் இதுவரை இருந்துவரும் 20 சதவீத வரியை குறைக்க வேண்டும். அதே நேரத்தில் இந்த ஆன்லைன் டிக்கெட் முறை மூலம் பிளாக் டிக்கெட் வருவதற்கும் வாய்ப்பு உண்டு. அதையும் முறைப்படுத்த வேண்டும். இதுபோன்ற நடைமுறை சிக்கல்களை களைந்து அரசு சரியான முறையில் இதை செயல்படுத்தினால் சினிமா மீண்டும் லாபம் கொழிக்கும் தொழிலாக மாறும்’. இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
Tags: south news