இனி காங்கிரசுக்காக பணியாற்ற மாட்டேன் – பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு
பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், பீகார் மாநிலம் முழுவதும் ‘ஜன் சுராஜ்’ என்ற பெயரில் யாத்திரை நடத்தி வருகிறார். அதையொட்டி, வைஷாலி மாவட்டத்துக்கு வந்த அவர், அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலைக்கேற்ப காங்கிரஸ் கட்சி தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. நான் நல்ல யோசனைகளை சொன்னபோதிலும், தனது வியூகத்தை மாற்றிக்கொள்ள காங்கிரஸ் முன்வரவில்லை.
அது காங்கிரசுக்கு கெடுதலாக அமையும். எனது 10 ஆண்டு அனுபவத்தில், பீகார், குஜராத், ஆந்திரா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், டெல்லி ஆகிய மாநிலங்களில் பல அரசியல் கட்சிகளுக்கு வெற்றி தேடிக் கொடுத்துள்ளேன்.
ஆனால், 2017-ம் ஆண்டு நடந்த உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் எனக்கு கசப்பான அனுபவமாக அமைந்துவிட்டது. காங்கிரஸ் தனது சொந்த தவறுகளால், அவமானகரமான தோல்வியை சந்தித்தது.
ஆனால் அதற்கு என் மீது பழி சுமத்தப்பட்டது. எதிர்காலத்தில் காங்கிரசுக்காக பணியாற்ற மாட்டேன். இருப்பினும், அக்கட்சி மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது என்று அவர் கூறினார்.