இந்த வருடம் கிரிக்கெட்டுக்கு விடுமுறை விட்ட டோனி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் நேரலையில் தொகுப்பாளர் ரூபா ரமணியுடன் உரையாடிய சாக்ஷி டோனி, அவரது கணவரும் கிரிக்கெட் வீரருமான டோனி குறித்தும் அவரின் ஊரடங்கு அனுபவங்கள் குறித்தும் சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் பேசும்போது ‘‘டோனி குறித்த விஷயங்கள் எங்கிருந்துதான் வருகிறது எனத் தெரியவில்லை. ஆனால் உங்கள் மீது ஊடக வெளிச்சம் இருக்கும் போது நீங்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும். மக்கள் ஒவ்வொருவரும் அவர்களது கருத்துகளை முன் வைப்பார்கள். இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட டோனியின் ஓய்வு குறித்த வதந்திகள் டுவிட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தன. எது நடந்தாலும் சரி எனக்கு என் தொலைபேசிக்கு அழைப்பும் மற்றும் குறுஞ்செய்தியும் வந்த வண்ணம் உள்ளன.
நாங்கள் சிஎஸ்கேவை மிகவும் மிஸ் செய்கிறோம். ஐபிஎல் போட்டிகள் நடக்குமா அல்லது நடக்காதா எனத் தெரியவில்லை. எனது மகளும் சிஎஸ்கே குறித்துக் கேட்டுக்கொண்டிருக்கிறாள். இருப்பினும் என்ன நடந்தாலும் இந்த வருடம் கிரிக்கெட் இல்லை. காரணம் நாங்கள் முன்னதாகவே வரும் நாட்களை எங்கே செலவு செய்யப்போகிறோம் என்பது குறித்துத் திட்டமிட்டு விட்டோம்.
கிரிக்கெட் இருந்தால் இருக்கும். ஆனால் டோனி வரும் நாட்களை மலையேற்றத்திற்குத் திட்டமிட்டு இருக்கிறார். நாங்கள் உத்தரகாண்ட் செல்ல இருக்கிறோம். அங்குள்ள ஒரு சிறிய கிராமத்தில் தங்குவதற்கும் திட்டமிட்டுள்ளோம். இது மட்டுமன்றி சாலை பயணங்களை மேற்கொள்ளவும் திட்டமிட்டிருக்கிறோம்.
இந்த ஊரடங்கு நாட்களில் டோனியின் மன அழுத்தத்தை வீடியோ கேம்கள்தான் பெருமளவு குறைத்தன. குறிப்பாக பப்ஜி. எங்களது படுக்கைகளை பப்ஜிதான் ஆக்கிரமித்துள்ளது’’ என்றார்.
டோனிக்கு இருசக்கர வாகனங்கள் மீது இருக்கும் ஈர்ப்பு பற்றிக் கேட்டபோது ‘‘இருசக்கர வாகன உபகரணங்களை வாங்கி அவரே அதை வடிவமைக்கிறார். அப்போது ஏதாவது ஒரு பகுதியைப் பொருத்த மறந்துவிட்டால், அடுத்த நாள் மொத்த உபகரணங்களையும் கழற்றிவிட்டு மீண்டும் அதனை வடிவமைப்பார்’’ என்றார்.