X

இந்த மாதம் கோடை வெயில் குறைவாக இருக்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்

ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் எப்படி இருக்கும் என்பது பற்றி இந்திய வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே கணித்து அறிக்கை அளிப்பது வழக்கம்.

அந்தவகையில் இந்திய வானிலை மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் குறைவாகவே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வானிலை மைய அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் இந்த மாதத்தில் (மார்ச்) இருந்தே கோடை வெயிலின் தாக்கம் தொடங்கிவிடும். இன்னும் சில நாட்களில் பனி குறைந்து வெயிலின் தாக்கம் தெரியத் தொடங்கும். இந்த ஆண்டு வடமாநிலங்களில்தான் அதிகளவில் வெயில் இருக்கும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது.

அதனுடன் ஒப்பிடுகையில், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் வெயிலின் அளவு வழக்கத்தை விடவும் அதற்கும் குறைவாகவும் பதிவாகவே வாய்ப்புகள் உள்ளன.

சென்னை உள்ளிட்ட கிழக்கு கடற்கரை பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் குறைவாகவே இருக்கும். பகலில் வெயிலின் அளவு குறைவாக பதிவாகும் காரணத்தால், இரவு நேரங்களிலும் வெப்பம் குறைவாகவே காணப்படும்.

கோடை காலத்தில் இரவில் ஏற்படும் பாதிப்புகள் இந்த ஆண்டு வெயில் குறைவாக இருக்கும் மாநிலங்களில் அதிக அளவில் இருக்காது.

அதேநேரத்தில் ராஜஸ்தான், குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் மார்ச் முதல் மே மாதம் வரையில் அதிகபட்ச வெயில் பதிவாக வாய்ப்புள்ளது. ஜம்மு-காஷ்மீர், லடாக், இமயமலை, மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும்.

அதேநேரத்தில் பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தமிழகத்தை போன்று வெயிலின் தாக்கம் சற்று குறைவாகவே காணப்படும். கோடை வெப்பம் ஏப்ரல், மே மாதங்களில் அதிகமாக இருக்கும். ஜூன் மாதம் 3-வது வாரம் வரையில் வெயிலின் தாக்கம் இருக்கும். கடந்த 4 ஆண்டுகளில், இந்த ஆண்டு தான் பிப்ரவரியில் மழையின் அளவு குறைவாக பதிவாகி உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.