இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மோதிய ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து, ஆஷஸ் தொடர் 2-2 என சமனில் முடிந்தது.
2001-ம் ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்ததில்லை என்ற சிறப்பை இங்கிலாந்து தக்கவைத்துக் கொண்டது. முதல் இரு டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. 4-வது டெஸ்ட் மழையால் டிராவில் முடிந்தது. இந்நிலையில், ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியின் செயல்பாட்டை இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.
இதுதொடர்பாக, சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என பின்னிலை வகித்தது. அதிலிருந்து மீண்டு 2-2 என சமநிலையில் இருப்பது டெஸ்ட் கிரிக்கெட்டின் அழகுக்கு ஒரு மரியாதை.
இங்கிலாந்து அணியின் மீண்டு எழும் திறன் அவர்களின் மன உறுதியைக் காட்டுகிறது. இயற்கை அன்னை எங்களுக்கு ஒரு தொடர் முடிவை மறுத்திருக்கலாம். ஆனால் அது இந்த நம்பமுடியாத விளையாட்டின் உணர்வைக் குறைக்கவில்லை. இந்தத் தொடர் நீண்ட நாட்களாக நினைவில் நிற்கும் தொடராக அமைந்துவிட்டது என பதிவிட்டுள்ளார்.