இந்த தேர்தலில் நாங்கள் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவோம் – சீமான் நம்பிக்கை
பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது.
அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணி, தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி ஆகியவற்றுடன் போட்டி போட்டுக் கொண்டு சீமான் பிரசாரம் செய்தார்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னத்தை மங்கலாக கண்ணுக்கு தெரியாத வகையில் தேர்தல் ஆணையம் அச்சிட்டுள்ளதாக நாம்தமிழர் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் நாம் தமிழர் கட்சி வழக்கு தொடர்ந்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு சின்னங்கள் அடங்கிய பட்டியல் அச்சடிக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்து விட்டதாக கூறி, நாம் தமிழர் கட்சியின் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக சீமான் அளித்த பேட்டி வருமாறு:-
தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி வளர்ச்சி அடைந்துள்ளது. அனைத்து தேர்தல்களிலும் தனித்தே போட்டியிட்டு களம் கண்டதால் நாம் தமிழர் கட்சியின் பலம் அதிகரித்துள்ளது. இந்த தேர்தலில் நாங்கள் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவோம்.
விவசாயி சின்னத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்து விட்டோம். ஆனால் ஓட்டுப்பதிவு எந்திரத்தில் சின்னம் சிறியதாக உள்ளது. இதனால் எங்கள் வெற்றியை தடுத்து விட முடியாது.
தமிழகம் முழுவதும் மக்கள் எங்களை ஆதரித்து வருகிறார்கள். இதனால் நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம்.
இந்த விவகாரத்தை பொறுத்தவரையில், ஆளும் அதிகார வர்க்கத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம், அடிபணிந்து விட்டது.
இவ்வாறு சீமான் கூறினார்.