விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய துணை கேப்டன் ரோகித் சர்மா 17 பவுண்டரி, 5 சிக்சருடன் 159 ரன்கள் நொறுக்கி பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆனார். அதன் விவரம் வருமாறு:-
* ரோகித் சர்மா இந்த ஆண்டில் ஒரு நாள் கிரிக்கெட்டில் 27 ஆட்டத்தில் விளையாடி 7 சதம் உள்பட 1,427 ரன்கள் குவித்து முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். 2-வது இடத்தில் ஷாய் ஹோப்பும் (1,303 ரன்), 3-வது இடத்தில் விராட் கோலியும் (1,292 ரன்) உள்ளனர்.
* ஒரு நாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா இந்த ஆண்டில் 7 சதங்கள் அடித்துள்ளார். இதன் மூலம் ஒரு ஆண்டில் அதிக சதங்கள் விளாசியவர்களின் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சவுரவ் கங்குலி (2000-ம் ஆண்டில் 7 சதம்), ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (2016-ம் ஆண்டில் 7 சதம்) ஆகியோரை சமன் செய்துள்ளார். இந்த வகையில் இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் முதலிடம் வகிக்கிறார். அவர் 1998-ம் ஆண்டில் ஒரு நாள் கிரிக்கெட்டில் 9 சதங்களை சுவைத்திருந்தார்.
* நேற்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா எடுத்த 159 ரன்களே, இந்த ஆண்டில் ஒரு நாள் போட்டியில் இந்தியர் ஒருவரின் தனிநபர் அதிகபட்சமாகும். 2013-ம் ஆண்டில் இருந்து ரோகித் சர்மாவின் ஸ்கோரே இந்தியாவின் தனிநபர் அதிகபட்சமாக நீடிக்கிறது. 2013-ம் ஆண்டில் 209 ரன், 2014-ம் ஆண்டில் 264 ரன், 2015-ல் 150 ரன், 2016-ல் 171* ரன், 2017-ல் 208*ரன், 2018-ல் 162 ரன் என்றவாறு தனிநபர் அதிகபட்சத்தை பதிவு செய்துள்ளார்.
* ஒரு போட்டியில் அதிக முறை 150 ரன்களை கடந்தவர்களில் ரோகித் சர்மா முதலிடத்தில் (8 முறை) தொடருகிறார். ஆஸ்திரேலியாவின் வார்னர் 2-வது இடத்தில் (6 தடவை) உள்ளார்.
* ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் 2019-ம் ஆண்டில் மட்டும் ரோகித் சர்மா 77 சிக்சர்கள் கிளப்பியிருக்கிறார். இதன் மூலம் ஒரு ஆண்டில் அதிக சிக்சர்கள் விரட்டிய தனது முந்தைய சாதனையை (2018-ம் ஆண்டில் 74 சிக்சர்) மாற்றி அமைத்திருக்கிறார்.
* ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் முதல் விக்கெட்டுக்கு 227 ரன்கள் திரட்டினர். ஒரு நாள் போட்டியில் தொடக்க விக்கெட்டுக்கு இந்திய ஜோடி 200 ரன்களுக்கு மேல் எடுப்பது இது 6-வது நிகழ்வாகும். இந்த வரிசையில் இந்தியாவின் 4-வது சிறந்த பார்ட்னர்ஷிப்பாக அமைந்துள்ளது.