தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், இந்த ஆண்டு 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்தது. இந்த அறிவிப்பு மாணவர்களுக்கு பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடியதாக அமையும் என்று கல்வியாளர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசிய போது, இந்த ஆண்டு நிச்சயமாக 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் எனவும் அடுத்த ஆண்டு தேர்வை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் தயார்படுத்துவதற்காக 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் மாலையில் 1 மணி நேரம் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. ஈரோடு மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் இது குறித்த சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
ஆனால், இந்த சுற்றறிக்கையை மறுத்துள்ள தொடக்கக் கல்வி இயக்குநரகம், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு கிடையாது என கூறியுள்ளது. 2019ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் அடிப்படையில், ஈரோடு மாவட்ட கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் இந்த உத்தரவை பிறப்பித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.