Tamilசெய்திகள்

இந்த ஆண்டு மிகப்பெரிய அரசியல் புரட்சி ஏற்படும் – அண்ணாமலை பேச்சு

தமிழக பா.ஜனதாவின் தலைமை தேர்தல் அலுவலகம் சென்னை அமைந்தகரையில் அமைக்கப்பட்டு உள்ளது. 40 தொகுதிகளுக்கும் தனித்தனி அறைகள், மற்றும் பல்வேறு துறைகளுக்கான அறைகள் இணையதள வசதியுடன் அமைக்கப்பட்டு உள்ளது.

இதன் திறப்பு விழா இன்று நடந்தது. தேர்தல் பொறுப்பாளர்கள் சுதாகர் ரெட்டி, அரவிந்த் மேனன் ஆகியோர் முன்னிலையில் இந்த அலுவலகத்தை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார். பின்னர் அவர் நிர்வாகிகள் மத்தியில் பேசியதாவது:-

கடந்த 2019 தேர்தலை வைத்து பார்க்கும்போது வருகிற ஏப்ரல் 2 அல்லது 3-வது வாரத்தில் தமிழகத்தில் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது. பா.ஜனதாவுக்காக காலம் காலமாக உழைத்தவர்களின் ஏக்கமும், கனவும் நிறைவேறும் காலம் நெருங்கி வருகிறது. இன்னும் 75 நாட்கள் இருக்கிறது. இதுவரை கட்சிக்காக உழைத்து கொண்டிருப்பவர்கள் தங்கள் உழைப்பை இரட்டிப்பாக்க வேண்டும்.

என் மண் என் மக்கள் யாத்திரை மூலமாக இதுவரை 183 சட்டமன்ற தொகுதிகளை சந்தித்துள்ளோம். 200-வது தொகுதியாக சென்னையில் வருகிற 11-ந்தேதி யாத்திரை செல்கிறோம். இதில் ஜே.பி. நட்டா கலந்து கொள்வார். 234-வது தொகுதியாக திருப்பூரில் யாத்திரை நிறைவு பெறுகிறது. எல்லா தொகுதிகளிலும் பிரதமர் மோடியின் திட்டங்களால் பயன் அடைந்த 100 பேரை தேடி கண்டுபிடித்து அவர்களில் 10 பேரை மேடையில் ஏற்றி பேச வைத்தோம்.

ரோட்டில் நடந்து சென்ற யாத்திரையை தாண்டி பல தரப்பட்ட மக்களை சந்தித்து வருகிறோம். அரசியல் களம் எப்படி மாறி இருக்கிறது என்பது நமக்கு தெரியும். இந்த ஆண்டு மிகப்பெரிய அரசியல் புரட்சி ஏற்படும். பிரதமர் மோடி ராமர் சிலை பிரதிஷ்டைக்காக சங்கல்பம் மேற்கொண்டு 11 நாள் விரதம் இருந்தார். அதேபோல் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைய வருகிற 75 நாட்களும் உழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

என் மண் என் மக்கள் யாத்திரை வருகிற 25-ந்தேதி பல்லடத்தில் நிறைவு பெறுகிறது. அன்றைய தினம் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரமாண்ட கூட்டம் நடக்கிறது. இதில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பார்கள். கடந்த 2 ஆண்டுகளாக பிரதமர் மோடி கோவை பகுதிக்கு செல்லவில்லை. எனவே இந்த கூட்டத்தை பல்லடத்தில் நடத்துகிறோம்.

இந்த தேர்தல் வித்தியாசமான தேர்தல். மாற்று கட்சிகளை சேர்ந்தவர்களும் மத்தியில் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்புகிறார்கள். தமிழகத்தில் பா.ஜனதா மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. எல்லோரும் திரும்பி பார்க்கும் வகையில் தேர்தல் முடிவுகள் அமையும்.

கூட்டணியை பொறுத்த வரை ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கிறது. கூட்டணி பேச்சுவார்த்தை என்பது கடினமான ஒன்று. பேச்சுவார்த்தை தொடர்ந்து நடக்கிறது. இன்னும் காலம் இருக்கிறது. தி.மு.க. 31 மாதங்களில் செய்துள்ள தவறுகளை சுட்டிக் காட்டுவோம். பா.ஜனதா அரசு செய்துள்ள சாதனைகளையும் மக்கள் மத்தியில் எடுத்து சொல் வோம். அவர்கள் முடிவு செய்வார்கள்.

இந்த தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படபோவதில்லை. இப்போது ஒரே நாடு ஒரே தேர்தல் வரப்போவதில்லை. மத்தியில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை முடிவு செய்யும் தேர்தல் இது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் தமிழக பா.ஜனதா தேர்தல் குழுக்களின் ஒருங்கிணைப்பாளராக சக்கரவர்த்தியும், இணை ஒருங்கிணைப்பாளர்களாக நாராயணன் திருப்பதி, நரேந்திரன், நாச்சியப்பன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.