X

இந்த ஆண்டு அதிக விக்கெட்களை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர்கள்

வங்காளதேசத்துக்கு எதிரான கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீரர்கள் சாதித்தனர். அவர்கள் மொத்தம் 19 விக்கெட்டை கைப்பற்றினார்கள்.

இதில் இஷாந்த் சர்மாவுக்கு 9 விக்கெட்டும், உமேஷ் யாதவுக்கு 8 விக்கெட்டும், முகமது‌ ஷமிக்கு 2 விக்கெட்டும் கிடைத்தன. சொந்த மண்ணில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் 19 விக்கெட் கைப்பற்றியது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு முன்பு 2017-ம் ஆண்டில் கொல்கத்தாவில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட்டில் வேகப்பந்து வீரர்கள் 17 விக்கெட் வீழ்த்தி இருந்தார்கள்.

இந்த டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீரர்கள் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. இந்திய மண்ணில் இப்படி நடைபெறுவது முதல் நிகழ்வாகும்.

இந்த ஆண்டில் இந்திய வேகப்பந்து வீரர்கள் 95 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளனர். சராசரி 15.16 ஆகும். ஸ்டிரைக் ரேட் 31.06 ஆகும். வேறு எந்த அணியிலும் வேகப்பந்து வீச்சாளர்கள் இந்த ஆண்டில் இவ்வளவு அதிகமான விக்கெட்டுகளை கைப்பற்றியது இல்லை.

விராட் கோலி கேப்டனாக பொறுப்பு ஏற்ற பிறகு இந்திய அணி 53 டெஸ்டில் விளையாடி இருக்கிறது. இதில் வேகப்பந்து வீரர்கள் மட்டும் 453 விக்கெட்டுகளை சாய்த்துள்ளனர். இதில் 170 விக்கெட்டுகள் சொந்த மண்ணில் எடுக்கப்பட்டவை ஆகும்.

முகமது‌ ஷமி அதிகப்பட்சமாக 37 டெஸ்ட்டில் 137 விக்கெட் வீழ்த்தி உள்ளார். இஷாந்த் சர்மா 102 விக்கெட்டும் (35), உமேஷ் யாதவ் 91 விக்கெட்டும் (32), பும்ரா 62 விக்கெட்டும் (12) எடுத்துள்ளனர்.

Tags: sports news