இந்தோனேசியாவின் பாண்டா கடற்பகுதியில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கடியில் 117 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 அலகாக பதிவாகியிருந்தது.
நிலநடுக்கம் காரணமாக அருகில் உள்ள கிசார் தீவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் ஆட்டம் கண்டன. வீடுகள், கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. தூங்கிக்கொண்டிருந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
பாண்டா கடலில் இருந்து 620 கிமீ தொலைவில் உள்ள ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரிலும் கடுமையான நில அதிர்வு ஏற்பட்டது. மக்கள் அலறியடித்து வீடுகளை விட்டு வெளியேறினர்.
இந்த நிலநடுக்கம் சக்திவாய்ந்ததாக இருந்தாலும் சுனாமி எச்சரிக்கை ஏதும் வெளியிடப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை ஏற்படுத்தக்கூடிய 450 எரிமலைகள் கொண்ட பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் இந்தோனேசியா உள்ளது குறிப்பிடத்தக்கது.