X

இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் விவகாரம்! – ராகுலின் குற்றச்சாட்டை மறுக்கும் நிர்மலா சீதாராமன்

பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு ஆர்டர் வழங்கி உள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பொய் தகவல் அளித்துள்ளார். அந்த நிறுவன ஊழியர்களுக்கு ஊதியம் கூட கொடுக்க முடியாமல் பலவீனப்படுத்தி அங்கு பணியாற்றும் ஊழியர்களை அனில் அம்பானி நிறுவனத்துக்கு மாற்ற மத்திய அரசு முயற்சி செய்கிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

இது குறித்து ஆதாரங்களை நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அவர் பதவி விலக வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தினார்.

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவை நேற்று கூடியது. அப்போது காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

காங்கிரஸ் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை. அவை தவறாக வழி நடத்துபவையாக இருக்கின்றன. இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துக்கு சுமார் ரூ.26 ஆயிரம் கோடி அளவுக்கு ஆர்டர் வழங்குவதற்கான ஒப்பந்தங்கள் ஏற்கனவே கையெழுத்தாகி விட்டன.

தற்போது ரூ.73 ஆயிரம் கோடி மதிப்பில் கொள்முதல் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. ஆர்டர் பெற்றதற்கான உறுதி பத்திரம் இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்திடம் இருந்து வந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.