இந்தி பிரச்சார சபை
மெட்ராஸ் முரண்பாடுகள் நிறைந்த நகரம்தான் என்பதில் சந்தேகமில்லை.
தியாகராய நகரின் மையப்பகுதியில், நாட்டில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இந்தி எதிர்ப்பு இயக்கத்தை வலுவாகத் தோற்றுவித்த நீதிக்கட்சித் தலைவர்களின் பெயர்கள் சாலைகளுக்குச் சூட்டப்பட்டுள்ளன.
அதே தியாகராய நகரின் மையத்தில் இந்தியைப் பரப்பும் ஓர் அமைப்பு பெருமையுடன் பெரிய வளாகத்தில் 80 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. அதைச் சுற்றியுள்ள சாலை அதன் பெயரில் திகழ்கிறது.
‘நீ பேசுவதை உன் நாட்டு மக்கள் புரிந்து கொள்வதற்காகவாவது ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் செலவிட மாட்டாயா?’ என்று தென்னக மக்களிடம் காந்தி அடிகள் அடிக்கடி கேட்பார். சுதந்திர இந்தியாவுக்கு ஆசைப்பட்ட அளவுக்கு காந்திக்கு வேறொரு விருப்பம் இருந்தது என்றால் அது முழு நாட்டிற்கும் பொதுவான மொழிதான். ஓர் இந்திய மொழியைத் தேசிய மொழியாக்கி, அதன் மூலம் மக்களை ஒருங்கிணைத்து தேசியத்தைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று காந்தி நினைத்தார். காந்தியின் உந்துதலால் ‘இந்தி பிரச்சாரம்’ என்பது சுதந்திர இயக்கத்தின் ஒரு முக்கிய பகுதியாகக் கருதப்பட்டது.