தமிழ் பட உலகில் முன்னணி நடிகராக உயர்ந்துள்ள விஜய் சேதுபதி, தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே மாதவனுடன் விக்ரம் வேதா, ரஜினியின் பேட்ட படங்களில் வில்லனாக வந்தார். வேறு மொழிகளில் இருந்தும் பட வாய்ப்புகள் குவிகின்றன.
சைரா நரசிம்ம ரெட்டி தெலுங்கு படத்தில் சிரஞ்சீவியுடனும், மார்கோனி மதாய் என்ற மலையாள படத்தில் ஜெயராமுடனும் நடித்துள்ளார். அமீர்கானுடன் ‘லால் சிங் சத்தா’ என்ற இந்தி படத்தில் நடிக்கவும் வாய்ப்பு வந்துள்ளது.
பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹான்க்ஸ் நடிப்பில் 1994-ல் வெளியாகி 6 ஆஸ்கார் விருதுகளை வென்ற ‘பாரஸ்ட் கம்’ படத்தின் இந்தி ரீமேக்காக லால் சிங் சத்தா தயாராகிறது.
இந்த படத்தில் அமீர்கான் உடல் எடையை 21 கிலோ குறைத்து நடிக்கிறார். அவரது தோற்றம் ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் வெளியாகி படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபோல் விஜய் சேதுபதியும், லால் சிங் சத்தா படத்தில் 25 கிலோ உடல் எடையை குறைத்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர். விஜய் சேதுபதி கைவசம் தற்போது லாபம், கடைசி விவசாயி, மாமனிதன் உள்ளிட்ட 6 படங்கள் உள்ளன.