இந்தி திணிப்பை கண்டித்து வரும் வரும் 15ம் தேதி திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இதுதொடர்பாக தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ மற்றும் தி.மு.க. மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் எம்எல்ஏ ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில், இந்திய துணைக் கண்டத்தின் பன்முகத் தன்மையை சிதைக்கும் வகையில், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணர்வு, ஒரே பண்பாடு என்ற ஆர்.எஸ்.எஸ்.-ன் சித்தாந்தத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு செயல்படுத்த முற்படுவதாகவும், இதன்மூலம் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் ஒருமைப்பாட்டை சிதைத்து, ஒருமை தன்மையாக்க நினைப்பதாகவும் குற்றம்சாட்டி உள்ளனர்.
அலுவல் மொழி சட்டத்தின் வாயிலாகவும், இந்திய அளவில் அனைத்து பாடத் துறைகளுக்கும் ஒரே பொது நுழைவு தேர்வு திட்டத்தின் மூலமாகவும் இந்தி மொழியை திணிக்க நினைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு, அதனை கைவிட வேண்டுமென்றும், புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் சமூகநீதிக்கு எதிரான திட்டங்களை கொண்டு வர வேண்டுமென்று நினைக்கும் மத்திய அரசின் முடிவினை திரும்பப் பெற வலியுறுத்தியும், வரும் 15.10.2022 அன்று சனிக்கிழமை காலை 09.00 மணியளவில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் “மாபெரும் கண்ட ஆர்ப்பாட்டம்” நடைபெறும் என அறிவித்துள்ளனர்.
இதில் தி.மு.க. இளைஞர் அணி – மாணவர் அணியின் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணித் தோழர்களும், மாணவர் அணித் தோழர்களும் திரளாக கலந்துகொள்ளும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.