இந்தி திணிப்பு என்பது தமிழகத்தில் நடக்காது – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி
சிவகாசியில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தி திணிப்பு என்பது தமிழகத்தில் நடக்காது. அறிஞர் அண்ணாவின் இருமொழி கொள்கைதான் எங்களுடைய நிலைப்பாடு. அதில் மாறுபட்ட கருத்து கிடையாது. இந்தியை படிக்கலாம். ஆனால் இந்தியை திணிக்க முடியாது. கட்டாய பாடமாக கொண்டு வர முடியாது. அப்படி ஒரு நிலை வந்தால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக அதை எதிர்த்து போராடுவார். சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் டெபாசிட் இழந்த தி.மு.க. நடந்து முடிந்த தேர்தலில் அதிக வெற்றிகளை பெற்று இருக்கிறது. இதற்கு அவர்கள் கொடுத்த பொய்யான வாக்குறுதி தான் காரணம். இனி வரும் தேர்தலில் எங்களுக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்கும்.
அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல் கிடையாது. முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள். அ.தி.மு.க.வுக்கு ஒரே ஒரு மத்திய மந்திரி என்ற நிலை இருப்பதாக தெரிகிறது. ஆனால் எங்கள் கட்சியில் பல மூத்த நிர்வாகிகள் இருக்கிறார்கள். அதனால் நாங்கள் 2 அல்லது 3 மத்திய மந்திரி பதவிகளை எதிர்பார்க்கிறோம். எங்களுக்கு மந்திரி பதவி கொடுக்கக்கூடாது என்று மத்திய அரசு நினைக்கவில்லை. வாங்க கூடாது என்றும் நாங்கள் நினைக்கவில்லை. முதல்-அமைச்சர் உத்தரவிட்டால் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு சென்று களப்பணியாற்ற தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.