X

இந்திய வீரர் ரிஷப் பந்தை பாராட்டிய டிம் பெய்ன் மனைவி!

ஆஸ்திரேலியா – இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியாவில் விளையாடினால் ஸ்லெட்ஜிங் இல்லாமல் இருக்காது. அடிலெய்டு டெஸ்டில் பெரிய அளவில் வார்த்தைப்போர் இல்லை.

ஆனால் பெர்த் டெஸ்டில் விராட் கோலி – டிம் பெய்ன் நேருக்குநேர் மோதிக்கொண்டனர். மெல்போர்ன் டெஸ்டில் டிம் பெய்ன் – ரிஷப் பந்த் ஆகியோருக்கு இடையில் கடும் வார்த்தைப்போர் நடந்தது.

ரிஷப் பந்த் பேட்டிங் செய்யும்போது டிம் பெய்ன் “ஒரு நாள் போட்டிக்கு டோனி வந்து விட்டார். நாம் இவரை (ரிஷப் பந்த்) ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு எடுத்துக் கொள்ளலாம். அந்த அணிக்கு பேட்ஸ்மேன் தேவை. அதனால் ஆஸ்திரேலியாவில் இருப்பதை கொஞ்ச நாள் நீட்டித்துக்கொள். ஹோபர்ட் அழகான நகரம். தங்குவதற்கு ஒரு சொகுசு குடியிருப்பை அவருக்கு வழங்கிவிடலாம்…. அப்புறம்… நான் என் மனைவியை சினிமாவுக்கு அழைத்து செல்லும்போது, நீதான் என் குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டும். சரியா..” என்று கூறி கேலி செய்தார்.

இதற்கு ரிஷப் பந்த் சுடச்சுட பதிலடி கொடுத்தார். டிம் பெய்ன் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, அவருக்கு பின்னால் நின்ற ரிஷப் பந்த், ஜடேஜாவை நோக்கி “நமது சிறப்பு விருந்தினர் ஒருவர் வந்திருக்கிறார். எப்போதாவது தற்காலிக கேப்டனை (ஸ்மித்துக்கு தடை விதிக்கப்பட்டதால் வேறு வழியின்றி கேப்டனாக்கப்பட்டவர்) பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? அவரை நீ அவுட் ஆக்க தேவையில்லை. ஏனெனில் அவருக்கு பேசுவது மிகவும் பிடிக்கும். எப்போதும் பேசிக்கொண்டு இருப்பார். பேச மட்டுமே அவருக்கு தெரியும்” என்றார்.

பிறகு அருகில் நின்ற மயாங்க் அகர்வாலிடம், “தற்காலிக கேப்டன் என்ற வார்த்தையை கேள்விபட்டு இருக்கிறாயா? எனக்கு தெரியும்” என்று கூறி கிண்டலடித்தார். இந்த பேச்சுகள் எல்லாம் ஸ்டம்பில் பொருத்தப்பட்டிருந்த மைக்கில் பதிவானது. ரிஷப் பந்தின் பேச்சை கேட்ட நடுவர் அவரை அழைத்து எச்சரித்தார்.

இந்நிலையில், டிம் பெய்ன் வீட்டிற்கு சென்ற ரிஷப் பந்த் டிம் பெய்னின் மனைவியை சந்தித்து குழந்தைகளை எடுத்து கொஞ்சினார். டிம் பெய்ன் குடும்பத்துடன் ரிஷப் பந்த் இருக்கும் படத்தை, அவரது மனைவி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரிஷப் பந்த் ”சிறந்த குழந்தை பராமரிப்பாளர்” என்று பாராட்டியுள்ளார்.

மைதானத்திற்குள் கடுமையாக மோதிக் கொண்ட போதிலும், டிம் பெய்ன் வீட்டிற்கு ரிஷப் பந்த் சென்றதை டுவிட்டர்வாசிகள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.