X

இந்திய விமான படைக்கு 70 அடிப்படை பயிற்சி விமானங்கள் வாங்க மத்திய அமைச்சகம் ஒப்புதல்

இந்திய விமான படையில் புதிதாக விமானிகளாக சேர்க்கப்படுபவர்களுக்கு பயிற்சி அளிக்க தேவையாக உள்ள அடிப்படை பயிற்சி விமானங்களின் பற்றாக்குறையை நீக்க ஆலோசிக்கப்பட்டது. இதன்படி, இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.6 ஆயிரத்து 828 கோடியே 36 லட்சம் மதிப்பில் இந்திய விமான படைக்கு தேவையான 70 எச்.டி.டி. 40 ரக அடிப்படை பயிற்சி விமானங்களை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தினை ஊக்குவிக்கும் முயற்சியாகவும் இந்திய வான்வெளி பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த முடிவு இருக்கும். இந்த விமானங்கள் 6 ஆண்டுகளில் ஒப்படைக்கப்படும். இந்த விமானம் குறைந்த வேகத்தில் கையாள கூடிய தன்மைகளை நல்ல முறையில் கொண்டுள்ளதுடன், சிறந்த பயிற்சி அளிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

உள்நாட்டிலேயே வடிவமைத்து, தயாரிக்கப்படும் சூழலால், இந்திய ஆயுத படைகளின் வருங்கால தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான மேம்படுத்துதலை செய்யும் வசதியையும் விமானம் கொண்டிருக்கும். சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்பட இந்திய தனியார் தொழிற்சாலைகளை இந்த தயாரிப்பு பணிக்கு எச்.ஏ.எல். ஈடுபடுத்தும் என அதுபற்றிய அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.

இந்த விமான கொள்முதலால், 100-க்கும் கூடுதலான சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை சேர்ந்த 1,500 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும், 3 ஆயிரம் பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பும் கிடைக்கப் பெறும்.