இந்திய விமானத்துக்கு உதவி செய்த பாகிஸ்தான் அதிகாரி!
ஜெய்ப்பூரில் இருந்து 150 பயணிகளுடன் ஓமன் நாட்டின் மஸ்கட் நகருக்கு கடந்த 14-ந்தேதி இந்திய விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென அங்கு வானிலை மோசமடைந்தது.
இதனால் விமானத்தை செலுத்த முடியாமல் விமானி தவித்த நிலையில், திடீரென மின்னல் ஒன்றும் விமானத்தை தாக்கியது. இதனால் 36 ஆயிரம் அடியில் இருந்து வேகமாக 34 ஆயிரம் அடிக்கு விமானம் இறங்கியது. இதனால் விமான ஊழியர்களும், பயணிகளும் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
உடனே சுதாரித்துக் கொண்ட விமானி, பாகிஸ்தான் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டுத்துறைக்கு அபாய சிக்னலை அளித்தார். இதைக்கேட்டு பாகிஸ்தான் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டுத்துறை உடனடியாக பதிலளித்தது. அதில் பணியாற்றிய அதிகாரி ஒருவர், மீதமுள்ள பாகிஸ்தான் வான் பகுதியை இந்திய விமானம் பத்திரமாக கடக்க வழிகாட்டினார்.
இந்த தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் பாலகோட்டில் இந்திய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதால் தனது வான் பகுதியை மூடியிருந்த பாகிஸ்தான், கடந்த ஜூலை மாதம்தான் இந்திய விமானங்களை தனது வான் பகுதியில் அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.