X

இந்திய வளர்ச்சிக்கான 5 முக்கை கொள்கைகள் – 30 லட்சம் மாணவர்களுக்கு பிரதமர் கடிதம்

பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடுவதில் ஆர்வம் மிக்கவர். குறிப்பாக ஆண்டுதோறும் பள்ளி இறுதித்தேர்வை எழுதப்போகும் மாணவர்களுக்கு பரீட்சைக்கு தயாராவது எப்படி என்று ஆலோசனை வழங்குவார். அப்போது மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலும் அளிப்பார்.

மாணவர்களை மிகவும் கவர்ந்த இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து பங்கேற்பது வழக்கம். அவ்வாறு பங்கேற்றவர்களில் பலர் பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிகளில் படிப்பை தொடர்பவர்களாகவும், பலர் பள்ளிகளில் படிப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மாணவ-மாணவிகளின் பெயர், முகவரியை திரட்டி அவர்களுக்கு பிரதமர் மோடி கையெழுத்துடன் கடிதம் எழுதுகிறார். அந்த கடிதம் முழுவதும் நாட்டுப்பற்றை ஊட்டுவதாகவே அமைந்துள்ளது. இந்தியாவின் உன்னதமான வளர்ச்சிக்கு 5 முக்கிய கொள்கைகளை கடைபிடிக்க வலியுறுத்தி இருக்கிறார்.

ஒவ்வொரு மாணவரின் பெயரையும் குறிப்பிட்டு கடிதத்தை எழுதி கடைசியில் பிரதமர் கையெழுத்து போட்டுள்ளார். கடிதத்துடன் பிரேம் பண்ணி மாட்டும் அளவுக்கு சிறந்த வடிவமைப்புடன் கூடிய ஒரு சான்றிதழையும் இணைத்துள்ளார்.

அதில் இந்திய வளர்ச்சிக்கான 5 முக்கிய கொள்கைகளாக அவர் குறிப்பிட்டு இருப்பது வளர்ச்சியடைந்த பாரதத்தின் இலக்கு, அடிமை சிந்தனையை அறவே நீக்குதல், நம் பாரம்பரியத்தை கொண்டாடுதல், ஒற்றுமையை உறுதி செய்தல், கடமைகளில் கவனம் செலுத்துதல் ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இந்த கடிதம் செல்கிறது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்களும் சுமார் 1 லட்சம் பேர் அடங்குவார்கள். அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் 6 லட்சம் பேர். இந்த கடிதங்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர் தாய்மொழியில் அமைந்துள்ளது.

Tags: tamil news