இந்திய-ரஷிய உச்சி மாநாடு டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பிற்பகலில் டெல்லி வருகிறார்.
விமான நிலையத்தில் இருந்து நேராக மாநாடு நடைபெறும் ஐதராபாத் இல்லத்துக்கு செல்கிறார். அங்கு அவரை பிரதமர் மோடி வரவேற்கிறார்.
பின்னர் இரு தலைவர்களும், தங்கள் நாட்டு உயர்மட்ட குழுவினருடன் பரஸ்பரம் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதில் இரு நாட்டு ராணுவ மற்றும் வெளியுறவு மந்திரிகளும் இடம்பெறுகின்றனர்.
இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி-புதின் இடையேயான நேருக்கு நேர் சந்திப்பு நடைபெறுகிறது.
இந்த உச்சி மாநாட்டுக்கு இறுதியில் இரு நாடுகளுக்கு இடையே 10 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படுகின்றன. மேலும் இந்த பேச்சுவார்த்தைகள், விவாதங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில் கூட்டறிக்கை ஒன்றும் வெளியிடப்படும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த மாநாடு நிறைவடைந்ததும் விளாடிமிர் புதின் நாடு திரும்புகிறார்.
இந்த மாநாட்டுக்கு முன்னதாக இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரும், ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜெய் லவ்ரோவும் சந்திக்கிறார்கள். இதைப்போல இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் ரஷிய ராணுவ மந்திரி செர்ஜெய் ஷோய்குவும் சந்தித்து பேசுகின்றனர்.
பின்னர் இந்த 4 மந்திரிகளும் பங்கேற்கும் 2+2 பேச்சுவார்த்தையும் நடைபெறுகிறது. இந்த சந்திப்புகளில் பரஸ்பர, பிராந்திய மற்றும் சர்வதேச அரசியல் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து இருநாட்டு மந்திரிகளும் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.