இந்தியா-ரஷியா இடையேயான 21-வது உச்சி மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி-ரஷிய அதிபர் விளாடிமிர் பங்கேற்று உரையாடினர். இரு நாடுகள் இடையேயான நல்லுறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்த உச்சிமாநாட்டில் புதின் பேசுகையில், இந்தியாவை மிகப்பெரிய சக்தியாகவும், நம்பகமான நண்பனாகவும் கருதுகிறோம் என்றார்.
‘இந்தியா நட்பு நாடு மற்றும் காலத்தால் பரிசோதிக்கப்பட்ட ரஷியாவின் நண்பன். நமது இரு நாடுகளின் உறவு வளர்ச்சியடைந்து வருகிறது. இது எதிர்காலத்தில் மேலும் வளர்ச்சியடைய விரும்புகிறேன்.
தற்போது, ரஷியாவில் இருந்து கூடுதல் முதலீடு வர உள்ள நிலையில் இரு நாடுகளுக்கும் இடையேயான முதலீடு 38 பில்லியனை தொட்டுள்ளது. வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் ராணுவம் மற்றும் தொழில்நுட்பத் துறையில் நாங்கள் பெரிதும் ஒத்துழைக்கிறோம்.
நாம் இணைந்து அதிநவீன தொழில்நுட்பத்தை உருவாக்கி அதை இந்தியாவில் தயாரிக்கிறோம். பயங்கரவாதம் தொடர்புடைய அனைத்தையும் பற்றி இயற்கையாகவே நாங்கள் கவலைப்படுகிறோம். பயங்கரவாதத்திற்கு எதிரான சண்டை என்பது போதைப்பொருள் கடத்தல் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றங்களுக்கு எதிரான சண்டையுமாகும்.
ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து நாங்கள் கவலைகொள்கிறோம். ஆப்கானிஸ்தானில் தீவிரவாதமும், தீவிரவாதத்திற்கு நிதி அளிப்பதும் அச்சுறுத்தலாக உள்ளது. ஆப்கானில் நிலவி வரும் சூழல் குறித்து கவனித்து வருகிறோம்’ என்றார் புதின்.