இந்திய மாணவர்களை பிணைக் கைதிகளாக வைத்திருக்கும் உக்ரை ராணுவம் – ரஷ்யா அதிர்ச்சி தகவல்
உக்ரைன் – ரஷியா போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில் பாதுகாப்பு கருதி கார்கிவ் நகரில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறும்படி இந்திய தூதரகம் நேற்று உத்தரவிட்டிருந்தது.
கார்கிவ்வில் தங்கியுள்ள இந்தியர்கள், பெசோசின், பபாயி, பெஸ்லியுடோவ்கா ஆகிய பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறும் இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டிருந்தது.
இதற்காக உக்ரைன் நாட்டு நேரப்படி நேற்று மாலை 6 மணிவரை கெடு விதிக்கப்பட்டிருந்தது. எனினும் இந்திய மாணவர்கள் அங்கிருந்து வெளியேறுவதில் பெரும் சிரமத்தை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், கார்கிவ் நகரில் இந்திய மாணவர்கள் குழுவை பிணைக் கைதிகளாக உக்ரைன் படைகள் பிடித்து வைத்திருப்பதாக ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.
எங்கள் தகவல்களின்படி, உக்ரைன் பிரதேசத்தை விட்டு வெளியேறி பெல்கோரோட் செல்ல விரும்பும் இந்திய மாணவர்களின் பெரும் குழுவை உக்ரைன் ராணுவ அதிகாரிகள் கார்கிவ்வில் வலுக்கட்டாயமாக வைத்துள்ளனர் என்று ரஷிய ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
உண்மையில், அவர்கள் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர். இந்திய குடிமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற தேவையான அனைத்து நடவடிக்கை களையும் எடுக்க ரஷ்ய ராணுவத்தினர் தயாராக உள்ளன. மேலும் ரஷிய பிரதேசத்தில் இருந்து தனது சொந்த ராணுவ போக்குவரத்து விமானங்கள் அல்லது இந்திய விமானங்கள் மூலம் அவர்களை இந்தியாவிற்கு அனுப்பி வைக்கவும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக நேற்று உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் பேசுகையில்,கார்கிவ் நகரில் உள்ள இந்திய மாணவர்களை வெளியேற அனுமதிக்க வேண்டும் என்றும், இந்தியர்கள் பத்திரமாக தாயகம் திரும்ப ரஷிய ராணுவம் உதவவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் உக்ரைன் ராணுவத்தினர் இந்திய மாணவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.