Tamilவிளையாட்டு

இந்திய மல்யுத்த சம்மேளனத்தை நிர்வகிக்க 3 பேர் கொண்ட குழு அமைப்பு

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ்பூஷன் சரண் சிங்கை கைது செய்யக் கோரி பஜ்ரங் பூனியா, சாக்ஷி மாலிக், வினேஷ் போகத், சங்கீதா போகத் உள்ளிட்ட மல்யுத்த வீரர், விராங்கனைகள் டெல்லியில் மாதக்கணக்கில் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து மல்யுத்த சம்மேளன நடவடிக்கைகளில் இருந்து பிரிஜ் பூஷன் ஒதுங்கினார். கோர்ட்டு உத்தரவுப்படி அவர் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை நடக்கிறது.

கடந்த 21-ந்தேதி டெல்லியில் நடந்த இந்திய மல்யுத்த சமமேளன புதிய நிர்வாகிகள் தேர்தலில் பிரிஜ் பூஷனின் ஆதரவாளர் சஞ்சய் சிங் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அடுத்த கனமே, மல்யுத்தத்தில் மீண்டும் பிரச்சினை வெடித்தது. பிரிஜ் பூஷனின் ஆதரவாளர்கள் யாரும் மல்யுத்த சம்மேளனத்தில் இருக்கக்கூடாது என்பது தான் வீரர்களின் பிரதான கோரிக்கை. தாங்கள் நினைத்தபடி நடக்காததால் வீராங்கனைகள் மறுபடியும் கோதாவில் குதித்துள்ளனர். பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் மத்திய அரசு வழங்கிய விருது, பதக்கங்களை திருப்பி அளிப்பதாக அறிவித்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, புதிய தலைவருக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்ததால் இந்திய மல்யுத்த சம்மேளனத்தை கடந்த 24-ந்தேதி மத்திய விளையாட்டு அமைச்சகம் அதிரடியாக இடைநீக்கம் செய்தது. மேலும், வீரர்களுக்கு போதிய அவகாசம் வழங்காமல் ஜூனியர் தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பை இந்த மாத இறுதிக்குள் நடத்தப்போவதாக புதிய நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது விதிமுறைகளுக்கு முற்றிலும் முரணானது என்றும் விளையாட்டு அமைச்சகம் சுட்டிக்காட்டியது. அத்துடன் மல்யுத்த நிர்வாகத்தை தற்காலிகமாக கவனிக்க இடைக்கால கமிட்டியை அமைக்கும்படி இந்திய ஒலிம்பிக் சங்கத்தை கேட்டுக் கொண்டது.

இந்த நிலையில் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அன்றாட நடவடிக்கைகளை கவனிக்க 3 பேர் கொண்ட இடைக்கால கமிட்டியை இந்திய ஒலிம்பிக் சங்கம் நேற்று அமைத்தது. இந்திய உசூ சம்மேளன தலைவர் பூபிந்தர் சிங் பஜ்வா கமிட்டியின் தலைவராகவும், முன்னாள் ஆக்கி வீரர் எம்.எம். சோமயா, முன்னாள் பேட்மிண்டன் வீராங்கனை மஞ்ஜூஷா கன்வார் ஆகியோர் உறுப்பினர்களாகவும் இந்த கமிட்டியில் இருப்பார்கள். வீரர்கள் தேர்வு, சர்வதேச போட்டிகளில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்பதற்கான பதிவை சமர்ப்பிப்பது, போட்டிகளை நடத்துவதற்கான ஒருங்கிணைப்பு, வங்கி கணக்கு விவரங்களை கையாள்வது, இதன் இணையதளத்தை நிர்வகிப்பது உள்ளிட்ட பணிகளை எல்லாம் இடைக்கால கமிட்டி மேற்கொள்ளும்.

ஏற்கனவே நிர்வாகிகள் தேர்தலுக்கு முன்பாக சில மாதங்கள் இடைக்கால கமிட்டி தான் இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாக பணிகளை கவனித்தது. அதில் பூபிந்தர் சிங் பஜ்வாவும் ஒரு உறுப்பினராக இருந்தார். அந்த அனுபவம் அவருக்கு நிர்வாகத்தை திறம்பட வழிநடத்த உதவிகரமாக இருக்கும்.

பஜ்வா கூறுகையில், ‘2024-ம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டி நடக்க உள்ளது. அதற்கு தயாராவதை உடனடியாக தொடங்க வேண்டும். பயிற்சி முகாமுடன் சீனியர் மற்றும் ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளை விரைவில் நடத்துவோம். நாட்டில் மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றாக மல்யுத்தம் திகழ்கிறது. முடிந்த அளவுக்கு ஒலிம்பிக்கில் அதிக பதக்கங்களை வெல்லும் வாய்ப்பை உருவாக்குவதே எங்களது இலக்கு’ என்றார்.