ஒற்றையர் பிரிவில் விளையாடும் பேட்மிண்டன் வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிக்க தென்கொரியாவை சேர்ந்த பெண் பயிற்சியாளர் கிம் ஜி ஹூனினை இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்திய பேட்மிண்டன் சங்கம் ஒப்பந்தம் செய்து இருந்தது. சமீபத்தில் நடந்த உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, பயிற்சியாளர் கிம் ஜி ஹூனின் வழிகாட்டுதலில் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தார். பயிற்சியாளர் கிம் ஜி ஹூனின் ஆலோசனை தனது ஆட்ட தரத்தை மேம்படுத்தி இருப்பதாக சிந்து வெகுவாக பாராட்டி இருந்தார். இந்த நிலையில் கிம் ஜி ஹூன் தனது பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனை இந்திய பேட்மிண்டன் அணியின் தலைமை பயிற்சியாளர் கோபிசந்த் நேற்று உறுதி செய்தார்.
இது குறித்து கோபிசந்த் கருத்து தெரிவிக்கையில், ‘பயிற்சியாளர் கிம் ஜி ஹூன் தனது பதவியை ராஜினாமா செய்து இருப்பது உண்மை தான். உலக சாம்பியன்ஷிப் போட்டி சமயத்தில் கிம்மின் கணவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டதாக தகவல் வந்ததை தொடர்ந்து அவர் நாடு திரும்பினார். அவரது கணவர் குணமடைய 4 முதல் 6 மாதம் வரை பிடிக்கும் என்று தெரிகிறது. கணவரை அருகில் இருந்து கவனிக்க வேண்டியது இருப்பதால் கிம் விலகி இருக்கிறார்’ என்றார். அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் கிம் ஜி ஹூன் விலகி இருப்பது சிந்துவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.