டி20 உலகக் கோப்பையில் உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் டி20 அணியாக களமிறங்கிய ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா பைனலுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. இத்தொடரில் சூப்பர் 12 சுற்றில் தேவையான வெற்றிகளுடன் அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா அழுத்தமான நாக் அவுட் போட்டியில் வழக்கம் போல சொதப்பி படுதோல்வியை சந்தித்து வெளியேறியது.
ஐபிஎல் தொடரில் பணம் சம்பாதிக்கும் இந்திய வீரர்கள் நாட்டுக்காக விளையாடும் போது முழுமூச்சுடன் போராடுவதில்லை என்று ரசிகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இந்நிலையில் தரமான அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்கும் நோக்கத்தில் 2008-ல் ஐபிஎல் தொடர் உருவாக்கப்பட்ட பின் இந்தியா இதுவரை ஒரு டி20 உலக கோப்பையை கூட வெல்லவில்லை என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது பற்றி அவர் கூறியதாவது:-
இந்தியா ஐபிஎல் தொடரால் பயனடையும் என்று அனைவரும் நினைத்தார்கள். இந்தியா 2007இல் டி20 உலக கோப்பையை வென்றது. ஆனால் ஐபிஎல் தொடங்கப்பட்ட பின் அவர்கள் இன்னும் டி20 உலக கோப்பையை வெல்லவில்லை. 2011இல் அதுவும் சொந்த மண்ணில் 50 ஓவர் கோப்பையை வென்றார்கள். எனவே இந்த இடத்தில் கேள்வி எழுகிறது. இதனால் வெளிநாட்டு தொடர்களில் தங்களது வீரர்களை அனுமதிக்கும் வகையில் இந்தியா தனது அணுகுமுறையை மாற்றுமா?
மேலும் ஆசிய கோப்பையிலேயே இந்திய பவுலர்களிடம் ஒரு மாற்றத்தை கண்டேன். அதாவது ஐபிஎல் தொடருக்கு பின் அவர்களது வேகம் குறைந்து விட்டது. எடுத்துக்காட்டாக முதல் ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக 145 கி.மீ வேகத்தில் வீசிய ஆவேஷ் கானுடைய வேகம் இப்போது 130 – 135 என குறைந்து விட்டது. எனவே அவர் ஐபிஎல் தொடரில் 12 – 13 கோடி ரூபாய்களை சம்பாதித்து விட்டதால் இந்த வேகம் குறைந்து விட்டதா என்பதை பிசிசிஐ ஆராய வேண்டும்.
மேலும் ஐபிஎல் தொடரில் இளம் வீரர்களுக்கான சம்பளத்தை குறைத்துக் கொடுக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் பசியுடன் சிறப்பாக செயல்படுவார்கள். ஏனெனில் பாகிஸ்தானில் ஒரு மாதத்தில் நான் 24 கோடிகளை சம்பாதித்தால் எனது வேலை முடிந்து விட்டதாக நினைத்து நாட்டுக்காக முழு மூச்சுடன் விளையாட மாட்டேன்.
என்று கூறினார்.