Tamilசெய்திகள்

இந்திய பங்குச்சந்தையில் வரலாறு காணாத அளவில் ஏற்றம்

அமெரிக்காவின் பெடரல் வங்கியின் வட்டி விகித மாற்றம் தொடர்பான எதிர்பார்ப்பு, டாலரின் மதிப்பு உயர்வு மற்றும் இந்திய பொருளாதாரம் குறித்த சாதகமான கணிப்புகளால் இந்திய பங்குச்சந்தைகள் வரலாறு காணாத அளவில் ஏற்றம் கண்டு வருகின்றன. மும்பை பங்குச்சந்தையில் நேற்று சென்செக்ஸ் 1030 புள்ளிகள் வரை உயர்ந்து உச்சத்தை எட்டியது.

இன்றும் பங்குச்சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்பாக காணப்படுகிறது. மும்பை பங்குச்சந்தையில் குறியீட்டெண் சென்செக்ஸ் 60000 புள்ளிகள் என்ற மைல்கல்லை கடந்தது. காலை 11 மணி நிலவரப்படி 60267 புள்ளிகள் என்ற நிலையில் சென்செக்ஸ் உச்சத்தில் இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 17933 புள்ளிகள் என்ற உச்சத்தை எட்டியது.

காலை வர்த்தகத்தின்போது அதிக லாபம் ஈட்டிய நிறுவனம் இன்போசிஸ் ஆகும். இந்நிறுவன பங்குகள் 2 சதவீத அளவிற்கு உயர்ந்தன. எல் அண்ட் டி, எச்.சி.எல் டெக்னாலஜிஸ், ஏசியன் பெயின்ட்ஸ், டிசிஎஸ், டெக் மகிந்திரா, எச்டிஎப்சி வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் ஏற்றம் பெற்றன. என்டிபிசி, எச்.யு.எல். பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் பின்சர்வ் நிறுவன பங்குகள் சரிவடைந்தன.