சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் இந்தியர்கள் பலர் தங்கள் கருப்பு பணத்தை போட்டு வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதை பற்றிய தகவல்களை பெறுவதற்காக, அந்நாட்டு அரசுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவை சேர்ந்த ஜியோடெசிக் லிமிடெட், ஆதி எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய 2 நிறுவனங்கள் மற்றும் ஜியோடெசிக் லிமிடெட் நிர்வாகிகள் பங்கஜ்குமார் ஓங்கார் ஸ்ரீவஸ்தவா, பிரசாந்த் சரத் முலேகர், கிரண் குல்கர்னி ஆகியோரது வங்கி முதலீடுகள் பற்றிய தகவல்களை அளிக்க சுவிட்சர்லாந்து நாட்டின் வரித்துறை ஒப்புக் கொண்டுள்ளது. இவை, இந்தியாவில் நிதி மோசடி தொடர்பாக விசாரணையை சந்தித்து வரும் நிறுவனங்கள் ஆகும்.
மேற்கண்ட நிறுவனங்கள் மற்றும் நபர்கள் இந்தியாவில் செய்த நிதி மோசடிகள் மற்றும் வரி மோசடிகள் குறித்த ஆதாரங்களை சுவிட்சர்லாந்திடம் இந்தியா சமர்ப்பித்தது. அத்துடன், அவர்களது சுவிட்சர்லாந்து வங்கி முதலீடு விவரங்களை அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தது. அதன் அடிப்படையில், நிர்வாகரீதியிலான உதவியை அளிக்க சுவிட்சர்லாந்து வரித்துறை சம்மதித்துள்ளது.
இருப்பினும், இந்த முடிவை எதிர்த்து, மேற்கண்ட நிறுவனங்களும், நபர்களும் மேல்முறையீடு செய்ய உரிமை உள்ளது.
ஆதி எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட், சென்னையில் 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது ஆகும். அந்நிறுவனம், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட வர்த்தகங்களில் அபரிமிதமாக வளர்ச்சி அடைந்தது.
அதே சமயத்தில், ஊழல் அரசியல்வாதிகளுடனான தொடர்பாலும், சட்டவிரோத பண பரிமாற்ற புகாருக்கு உள்ளானதாலும் சிக்கலை சந்தித்தது. அந்த நிறுவனத்தின் சொத்துகள் தொடர்பாக வருமான வரித்துறை, பலதடவை சோதனைகளை நடத்தி உள்ளது.
ஜியோடெசிக் லிமிடெட், 1982-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பங்குச்சந்தையில் பட்டியலிட்டப்பட்ட நிறுவனம் ஆகும். பங்குச்சந்தை விதிமுறைகளை மீறியதற்காக, பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான ‘செபி’யின் நடவடிக்கைக்கு உள்ளானது. அமலாக்கத்துறை, மும்பை போலீசின் பொருளாதார குற்றப்பிரிவு ஆகிய அமைப்புகளின் நடவடிக்கைகளையும் சந்திக்க நேர்ந்தது.