Tamilசெய்திகள்

இந்திய தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் சரத் பவார் அணி

இந்திய தேர்தல் ஆணையம் கடந்த சில தினங்களுக்கு முன் அஜித் பவார் தலைமையில் இயங்கும் அணிக்குதான் தேசியவாத காங்கிரஸ் கட்சி என அங்கீகரித்தது. மேலும், கடிகாரம் சின்னத்தையும் பயன்படுத்த அனுமதி அளித்தது.

இதனால் சரத் பவார் தனது அணிக்கு “தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திர பவார்” கட்சி எனப் பெயர் சூட்டினார். தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்படும் என சரத் பவார் அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து சரத் பவார் அணியினர் முறையீடு செய்துள்ளனர். முன்னதாக, அஜித் பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏ.-க்களுடன் பிரிந்து சென்று தனியாக செயல்பட்டு வந்தார். அத்துடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் இணைந்து துணை முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் பலர் அமைச்சரவையில் இடம் பிடித்தனர்.

கட்சியில் இருந்து விலகி தனியாக செயல்படும் அஜித் பவார் உள்ளிட்டோரை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து நீக்க வேண்டும் என சபாநாயகரிடம் புகார் அளித்தனர். ஆனால், சபாநாயகர் சரத் பவார் அணியின் கோரிக்கையை நிராகரித்துவிட்டார். அதனைத் தொடர்ந்துதான் தேர்தல் ஆணையம் அஜித் பவார் அணியை தேசியவாத காங்கிரஸ் கட்சியாக அங்கீகரித்தது.