Tamilவிளையாட்டு

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன் யார்? – யுவராஜ் சிங் கருத்து

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக ஜனவரி 16 ஆம் தேதி அறிவித்தார்.

ஏற்கனவே அவர் டி20, ஒருநாள் போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய நிலையில்,  பிசிசிஐ – விராட் கோலிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடு மற்றும் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வி ஆகிய காரணங்களால் அவர் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக யார் நியமிக்கப்படவுள்ளனர் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சிலர் ரோகித் சர்மாவை டெஸ்ட் கேப்டனாக நியமிக்க பரிந்துரை செய்து வருகின்றனர்.

ஆனால், முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், ரிஷப் பண்ட் தான் புதிய கேப்டன் பதவிக்கு தகுதியானவர் என கூறியிருந்தார். இதற்கு யுவராஜ் சிங்கும் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து யுவராஜ் சிங் கூறியதாவது:-

ரிஷப் பண்ட் தான் இந்திய டெஸ்ட் அணியை வழி நடத்த சிறந்த வீரர். ஸ்டம்பிற்கு பின் நின்றபடி அவரால் ஆட்டத்தை எளிதாக கணிக்க முடியும். மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பதவியில் இருந்து ரிக்கி பாண்டிங் விலகியவுடன் ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

அதற்கு பின் அவரது பேட்டிங்கில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. புதிதாக கிடைத்த கேப்டன் பொறுப்பு அவரை, 100 ரன்கள், 150 ரன்கள், 200 ரன்கள் கூட அடிக்க வைத்தது.

அதேபோன்று ரிஷப் பண்டுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டால் அவரால் பல சதங்களை விளாச முடியும்.

இவ்வாறு யுவராஜ் சிங் தெரிவித்தார்.