X

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் விராட் கோலிக்கு பதிலாக ரோகித் சர்மாவை தேர்வு செய்தது ஏன்? – சவுரக் கங்குலி விளக்கம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்ததில் இருந்து மீண்டும் கேப்டன்சி குறித்த விவாதம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 68 போட்டியில் தலைமையேற்று 40 வெற்றி, 11 டிராவுடன் 4-வது சிறந்த கேப்டனாக இருந்த விராட் கோலி பதவி விலகியது ஏன் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தென்னாப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் தொடருடன் திடீரென கேப்டன்சியை விலகியது ஏன் என்றும், பிசிசிஐ தலைவர் கங்குலி உடனான மோதலால் மட்டுமே விராட் கோலி பதவி விலகினார் என்றும் ரசிகர்கள் மத்தியில் கருத்து எழுந்துள்ளது.

இந்த நிலையில் விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியது பற்றி சவுரவ் கங்குலி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து சவுரவ் கங்குலி கூறியதாவது:-

டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன்சியில் இருந்து விராட் கோலி விலகிய போது பிசிசிஐ தயாராக இல்லை. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், விராட் கோலி டெஸ்ட் கேப்டன்சியை விட்டு விலகுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அதற்கான காரணத்தை விராட் கோலியால் மட்டுமே சொல்ல முடியும்.

அதேபோல் விராட் கோலி டெஸ்ட் கேப்டன்சியில் இருந்து விலகியது பற்றி பேசி எந்த பிரயோஜனமும் இல்லை. அந்த நேரத்தில் இந்திய அணிக்கு உடனடியாக ஒரு கேப்டனை நியமிக்க வேண்டிய பொறுப்பு தேர்வுக்குழுவுக்கு இருந்தது. அதனால் சிறப்பாக ஆடி வந்த ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags: tamil sports