இந்திய அணி மற்றும் ஐபிஎல்லில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக திகழ்ந்து வருபவர் தீபக் சாஹர். இவர் வேகப்பந்துவீச்சாளராக இருந்தாலும், அணிக்கு தேவையான நேரத்தில் சிறப்பாக பேட் செய்து ஆல்ரவுண்டரை போல செயல்பட்டு வருகிறார்.
இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் ரூ.14 கோடிக்கு சிஎஸ்கே அணிக்கு தேர்வான இவர், காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை.
இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை அணியின் பிளே ஆப் போட்டியின் போது தனது நீண்ட நாள் தோழியான ஜெயா பரத்வாஜிடம் தனது காதலை வெளிப்படுத்தினார். ஜெயாவும் காதலுக்கு மைதானத்திலே சம்மதம் தெரிவித்த நிலையில், இவர்கள் கடந்த 1 வருடத்திற்கும் மேலாக காதலித்து வந்தனர்.
இந்நிலையில் தீபக் சஹார், தனது காதலி ஜெயாவை ஆக்ராவில் உள்ள ஒரு ஹோட்டலில் நேற்று முன் தினம் பிரமாண்டமான முறையில் திருமணம் செய்துகொண்டனர். இதில் ராகுல் சாஹர் உள்ளிட்ட நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தீபக் சாஹரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி டெல்லியில் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் டோனி, விராட் கோலி, மற்றும் இந்திய அணியின் பிற வீரர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.