இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். ஒயிட் பால் கிரிக்கெட்டில் தனக்கென்று ஒரு இடத்தை ஏற்படுத்திக் கொண்டவர்.
டி20 கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 6 சிக்ஸ் விளாசியவர். 2007-ம் ஆண்டு இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்வதற்கும், 2011-ல் 50 ஓவர் உலக கோப்பையை வெல்வதற்கும் முக்கிய காரணமாக இருந்தார்.
இவர் திடீரென சர்வதேச மற்றும் ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். பிசிசிஐ இவருக்கு பிரிவு உபசார தொடரைக் கூட நடத்தவில்லை. இந்நிலையில் பிசிசிஐ தன்னை தொழில்முறை வீரராக நடத்தவில்லை என்று யுவராஜ் சிங் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து யுவராஜ் சிங் கூறுகையில் ‘‘சிலருக்கு பிரிவு உபசாரம் கொடுக்கப்படும்போது, எனக்கு அது குறித்து முடிவு கூட எடுக்கப்படவில்லை. அந்த முடிவு பிசிசிஐ-யிடம் தான் உள்ளது. எனது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதி காலத்தில் அவர்கள் என்னை தொழில்முறை கிரிக்கெட்டராக நடத்தவில்லை என்று உணர்ந்தேன்.
ஆனால், இந்தியாவுக்காக சிறப்பாக விளையாடி ஹர்பஜன் சிங், சேவாக், ஜாகீர் கான் போன்ற வீரர்களும் தவறாக நிர்வகிக்கப்பட்டார்கள். இது இந்திய கிரிக்கெட்டின் ஒரு பகுதி. நான் இதை இதற்கு முன் பார்த்துள்ளேன். அதனால் உண்மையிலேயே ஆச்சர்யப்படவில்லை.
வருங்காலத்தில் இந்திய அணிக்காக நீண்ட காலம் விளையாடியவர்கள், குறிப்பான கடினமான காலத்தில் அணிக்கு கைக்கொடுத்தவர்களுக்கு, நீங்கள் கவுரவம் அளிக்கப்பட வேண்டும். கவுதம் கம்பிர் போன்ற இரண்டு உலககோப்பையை வாங்கிக் கொடுத்தவர்களுக்கு கொடுக்க வேண்டும். சுனில் கவாஸ்கருக்குப்பின் சேவாக் டெஸ்ட் போட்டியில் மிகப்பெரிய மேட்ச் வின்னராக இருந்தார். ஜாகீர் கான் 350 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். லட்சுமண்…. இதுபோன்று வீரர்கள்….’’ என்றார்.