இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) புதிய தலைவராக சவுரவ் கங்குலியும், செயலாளராக ஜெய் ஷாவும், பொருளாளராக அருண்சிங் துமாலும், இணைச் செயலாளராக ஜெயேஷ் ஜார்ஜூம், துணைத்தலைவராக மஹிம் வர்மாவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த அக்டோபர் மாதம் பொறுப்பேற்றனர்.
இந்த நிலையில் புதிய தலைவர் கங்குலியின் தலைமையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மும்பையில் இன்று நடக்கிறது. கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விதிமுறைகளை மறுசீரமைப்பு செய்யும் விதமாக சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி லோதா கமிட்டி பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டன. இவற்றில் ஒன்று, ஒருவர் மாநில கிரிக்கெட் சங்கத்திலோ அல்லது பி.சி.சி.ஐ.-யிலோ தொடர்ந்து 6 ஆண்டுகள் பதவி வகித்தால் 3 ஆண்டு இடைவெளி விட வேண்டும் என்பதாகும். இந்த விதியை மாற்றம் செய்ய புதிய நிர்வாகிகள் விரும்புகிறார்கள். அதாவது இந்த பதவி காலத்தை இரண்டையும் சேர்த்து கணக்கிடக்கூடாது. மாநில சங்கத்தில் பதவியில் இருந்தாலும் கிரிக்கெட் வாரியத்திலேயே தொடர்ந்து 6 ஆண்டுகள் பொறுப்பில் இருக்கும் வகையில் விதிமுறையை திருத்தம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்கு 4-ல் 3 பங்கு உறுப்பினர்கள் ஆதரவு அளிக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டின் ஒப்புதலும் அவசியமாகும்.
இதை நிறைவேற்றினால் தற்போதைய தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் 2024-ம் ஆண்டு வரை பொறுப்பில் நீடிக்க முடியும். இல்லாவிட்டால் ஏற்கனவே பெங்கால் கிரிக்கெட் சங்கத்தில் 5 ஆண்டுக்கு மேல் பதவி வகித்து விட்ட சவுரவ் கங்குலி ஜூலை மாதத்திற்கு பிறகு பி.சி.சி.ஐ. தலைவர் பதவியை துறக்க வேண்டி இருக்கும் என்பது நினைவு கூரத்தக்கது.
கிரிக்கெட் வாரிய செயலாளருக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது, போட்டித் தொடருக்கான கமிட்டி, பெண்கள் அணியின் தேர்வு கமிட்டி, கிரிக்கெட் திறமை கமிட்டி, மண்டல கமிட்டி, நடுவர்கள் கமிட்டி ஆகியவற்றுக்கு நிர்வாகிகளை நியமிப்பது குறித்தும் முடிவு செய்யப்படுகிறது.