இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகும் கங்குலி!

இந்திய கிரிக்கெட் வாரிய (பிசிசிஐ) நிர்வாகிகள் தேர்வு வரும் 23-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி, பிசிசியின் புதிய தலைவராக ஒருமனதாக தேர்வாகும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. பிசிசிஐயின் தலைவர் மற்றும் பிற பதவிகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், கங்குலிக்கு பெரும்பாலான நிர்வாகிகள் மத்தியில் ஆதரவு காணப்படுகிறது. இதனால், கங்குலி அப்பதவிக்கு தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.

கங்குலி பிசிசிஐ தலைவராக வரும் பட்சத்தில் எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியே என நிர்வாகிகள் பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர்.

பிசிசிஐ செயலாளர் பதவிக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். புதிய பொருளாளர் பதவிக்கு பிசிசிஐயின் முன்னாள் தலைவர் அனுராக் தாக்கூரின் இளைய சகோதரர் துமால் போட்டியிட மனுதாக்கல் செய்ய உள்ளார்.

இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்றாலும், வேறு யாரும் போட்டியிடாததால் தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. 47 வயதாகும் கங்குலி தற்போது பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவராக பதவி வகிக்கிறார்.

இதேபோல் கர்நாடகாவைச் சேர்ந்த பிரிஜேஷ் பட்டேல், ஐபிஎல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news